மணல் திருட்டு- காவலர்களுக்கு ரகசிய தகவல்:


நெல்லை மாவட்டம் நாங்குநேரி உட்கோட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு உட்பட்டது வெங்கட்ராயபுரம் பகுதி. இங்குள்ள குளத்தில் மணல் திருட்டு நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நேற்று இரவு சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் அங்கு இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் விசாரிக்க சென்றுள்ளனர். அப்போது காவல்துறையை கண்டதும் மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் ஜேசிபி வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் போட்டு விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்த ஜேசிபி மற்றும் இருசக்கர வாகனத்தை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். 


வீட்டிற்குள் பூட்டி வைத்து வாக்குவாதம்- கதவை உடைத்த காவலர்கள்:


விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த திமுக பிரமுகரான கங்கை ஆதித்தன் என்பது தெரிய வந்த நிலையில் அவரை பிடிப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் காவல்துறை வருவதை அறிந்த கங்கை ஆதித்தனின் மனைவி முதலில் கணவர் வீட்டில் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அவரை கைது செய்ய விடாமல் அவரது மனைவி மற்றும் நண்பர்கள் தடுத்துள்ளனர். இந்த நிலையில்  நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னகுமார் தலைமையில் 10 பேர் கொண்ட போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து அவர் உள்ளே இருப்பதை காவல்துறையினர் தெரிந்து கொண்ட நிலையில், இன்று காலை தனது பிள்ளைகளுடன் வெளியே வந்து வீட்டை பூட்டி கொண்டார். தொடர்ந்து காவல்துறையினர் கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி காவல்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 




கைதிலிருந்து தப்பிக்க நிர்வாண கோலத்தில் இருந்த திமுக பிரமுகர்:


குற்றம் சாட்டப்பட்ட கங்கை ஆதித்தனை கைது செய்யவிடாமல் காவல் ஆய்வாளரை அவரது மனைவி தடுத்த நிலையில் நாங்கு நேரி உதவி காவல் கண்காணிப்பாளர்  நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் வீட்டின் கதவை உடைத்து 4 மணி நேரம் கழித்து அவரை கைது செய்தனர். முன்னதாக அவரது மனைவியிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடந்த 3 மணி நேரமாக அவரை கைது செய்யவிடாமல் தடுத்து வருகிறீர்கள். எங்களது பணியை செய்ய விடுங்கள். முதலில் நிர்வாணமாக இருக்கும் அவரை ஆடையை அணிய சொல்லுங்கள் என்று பேச்சுவார்த்தை  நடத்தினார். அதற்கு கங்கை ஆதித்தன் மனைவி அவர் என்ன கொலை குற்றமா செய்து விட்டார். இப்படி வீடு புகுந்து கைது செய்கிறீர்கள். குற்றவாளியை வெளியில் வைத்து கைது செய்யுங்கள் என்று கடுமையான வாக்குவாதம் செய்தார். அப்போது ஏஎஸ்பி மணல் கடத்துவதும் ஒரு கொலை குற்றம் தான், கனிம வளம் கடத்துவதும் ஒரு கொலை குற்றம் தான் என தெரிவித்தார்.  நான் டிஎஸ்பி அலுவலகம் சென்று மனு அளித்த பின்  நடவடிக்கை எடுங்கள் இந்த ஒரு முறை அவரை விட்டு விடுங்கள், உங்களை நம்பி அனுப்ப முடியாது. ஜெயராஜ், பென்னிக்ஸை கொலை செய்தது போல் எனது கணவரையும் கொன்று விடுவீர்கள் என்று கூறினார். பெரும் பரபரப்பிற்கு மத்தியில் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். 


மேலும் இதேபோன்று அவர் கைது செய்யப்படாமல் தப்பிப்பதற்காக ஆடையை கழட்டி நிர்வாணமாக வீட்டிற்குள் நின்றதுடன் ஆடை அணியாமல் தப்பிக்க பலமுறை முயற்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது. இவர் மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இந்த சம்பவதில் தொடர்புடைய முருகேசன் என்பவரையும், மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்தேறிய இந்த மணல் திருட்டு சம்பவத்தில் நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பிரசன்ன குமார் ஐபிஎஸ் தலைமையில் சென்ற படையினர் குற்றவாளியை கைது செய்யும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.