விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவா் மாரிமுத்து (வயது 45). இவா் தனக்கு சொந்தமான நிலத்தில் பட்டி அமைத்து ஆடுகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் பட்டியில் இருந்த 12 வெள்ளையாடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆடுகள் திருடிச்சென்றது தொடர்பாக திண்டிவனம் மன்னார் சாமி கோவில் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 22), சத்யராஜ் (26), குமார் (25), கமல் (34) ஆகிய 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி முன்னிட்டு ஆடுகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




தீபாவளி ஆடுகள் விற்பனை அமோகம் :


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வார ஆட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். செஞ்சி பகுதியில் வார்க்கப்படும் ஆடுகள் பெரும்பாலும் விவசாய நிலங்களிலும், மலைப்பகுதியிலும் மேய்க்கப்பட்டு வளர்க்கப்படுவதால் செஞ்சி பகுதியில் உள்ள ஆடுகளை வாங்க தேனி,கம்பம், கிருஷ்ணகிரி,ஓசூர், ஆம்பூர், வேலூர்,சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம்.


இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால்  இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தைக்கு விவசாயிகள் மற்றும் ஆடுகளை வளர்ப்பவர்களும் அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.


வெள்ளாடுகள் ஜோடி 15000 முதல் 30000 ஆயிரம் வரையிலும் செம்மறி ஆடுகள் 25000 முதல் ஜோடி 30000 ஆயிரம் வரையிலும் குறும்பாடுகள் ஜோடி 50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு துவங்கிய ஆட்டு சந்தையில் ரூபாய் 6 கோடி வரை ஆடுகள் விற்பனை அமோகமாக நடைப்பெற்றது. சுமார் 4 மணி நேரத்திலேயே 6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகளும் ஆடு வளர்ப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.