விழுப்புரம் : திண்டிவனத்தில் போதை ஊசி, குளுக்கோஸ், மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அதிக அளவிலான போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுக்கும் விதமாக திண்டிவனம் உட்கோட்டை துணை துணை காவல் கண்காணிப்பாளர் சுராஜ் பாண்டியன் மேற்பார்வையில் திண்டிவனம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி உதவி ஆய்வாளர் சண்முகம், ஐயப்பன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் கிடங்கள் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது கிடங்கள் வண்ணாங்குளம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூன்று வாலிபர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் மூவரிடமிருந்து 150 போதை மாத்திரை 5 குளுக்கோஸ் பாட்டில் மற்றும் 10 போதை ஊசிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில் திண்டிவனம் வடஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் இளந்திரையன்(20), கண்ணன் என்பவரின் மகன் முத்துராமன்(22), திண்டிவனம் கிடங்கள் இரண்டு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் அப்பு (21) என்கிற ஆகாஷ் என்பது தெரிய வந்தது இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். திண்டிவனத்தில் போதை மாத்திரை, போதை ஊசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்