விழுப்புரம் : ஆரோவில் அருகே தொடர் வழிபறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட மூவரை போலீசார் கைது செய்து செய்தனர். தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நைனார்பாளையத்தை சேந்தவர் சவுந்தரபாண்டியன், 45; இவர் அச்சரம்பட்டில் முந்திரி ஆயில் கம்பெனி வைத்துள்ளார். கடந்த 21ம் தேதி இரவு தனது பைக்கில் கம்பனெிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அச்சரம்பட்டு ஏரிக்கரை அருகே சென்றபோது, இரு பைக்குகளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், சவுந்தரபாண்டியனை வழிமறித்து, மொபைல் போனை பறித்து சென்றனர். இது குறித்து அவர் ஆரோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிபறியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், பூத்துறை பகுதியில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரு பைக்குகளில் வந்த மூவரை மடக்கி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முரணான பதில்களை கூறவே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், புதுச்சேரி சண்முகாபுரம் செண்பகா நகரை சேர்ந்த ராஜா மகன் பார்த்தசாரதி, 19; ஜீவா வீதியை சேர்ந்த வெற்றிவேல் மகன் முகிலன், 19; மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், கடந்த 21ம் தேதி தி சவுந்தரபாண்டியன் மற்றும் இரும்பை சந்திப்பு அருகே ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 2 ஆயிரம் பணம் மற்றும் மொபைல் போன் பறித்ததும், தொடர்ச்சியாக, பூத்துறை பகுதியில் கார் கண்ணாடியை உடைத்ததாக ஒப்புக்கொண்டனர்.
அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் நவீன், 22; ரஞ்சித்குமார் மகன் நந்தகுமார், 23; மேட்டுப்பாளையம் சாணரப்பேட் பகுதியை சேர்ந்த ரவி மகன் சூர்யா (எ) சங்கர் கணேசன், 19; ஆகியோரும் கூட்டாக சேர்ந்து வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் முகிலன் மீது ஒரு கொலை வழக்கும், பார்த்தசாரதி மீது ஒரு அடிதடி வழக்கும் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட அவர்களிடம் ஒரு மொபைல் போன், இரண்டு பைக் மற்றும் இரு கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள நவீன், நந்தகுமார், சூர்யா ஆகிய மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.