டெல்லியைச் சேர்ந்தவர் ரவீந்தர் பிஸ்த். டெல்லி புறநகரான நங்லோயில் வசித்து வருகிறார். இவரது மனைவி கமலா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 19 வயதான மகள் மேக்னா ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகன் நவ்நீத் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.


மங்கோல்புரியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ரவீந்தர் பிஸ்த், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது அவரை வழிமறித்த மூன்று சிறுவர்கள் அவரிடம் இருந்து செல்போனை திருட முயற்சித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ரவீந்தர் அவர்களிடம் இருந்து தனது செல்போனை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த சிறுவர்கள் மூன்று பேரும் ரவீந்தரை தங்களிடம் இருந்த கத்தியால் குத்தியுள்ளனர். பின்னர், அவரது செல்போனை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். சிறுவர்கள் கத்தியால் குத்தியதில் காயமடைந்த ரவீந்தர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.




இதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், கொலை செய்த மூன்று சிறுவர்களையும் கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரவீந்தர் பிஸ்த்தின் பர்ஸ், 700 ரூபாய் ரொக்கம் மற்றும் அவரது ஆதார் கார்டு ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து பட்டன் வகையிலான கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த சிறுவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மூன்று பேருக்கும் 17 வயது மட்டுமே ஆவதும், அந்த சிறுவர்கள் மது குடிப்பதற்காக பணம் பறிப்பதையும், விலை உயர்ந்த பொருட்களை திருடுவதையும் தங்களது வாடிக்கையாக வைத்திருந்துப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் ரவீந்தர் பிஸ்திடம் செல்போன் மற்றும் பணத்தை திருடி, அந்த பணம் மூலமாக மது வாங்க முயற்சித்ததும் தெரியவந்துள்ளது என்றும் துணை காவல் ஆணையர் பர்வீந்திர் சிங் கூறியுள்ளார்.


மது வாங்குவதற்காக ஒரு நடுத்தர வயது ஆணை. மூன்று சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.