திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபிக். இவர் சிங்கப்பூர் காவல்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கூத்தாநல்லூரை அடுத்துள்ள அத்திக்கடை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.  இதற்காக பெண் வீட்டாரிடம் இருந்து 150 சவரனுக்கு மேல் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த கை கடிகாரம் ஆகியவற்றையும் சீர்வரிசையாக பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் எனகூறி மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.




பிறகு  தனது சொந்த ஊரான நீடாமங்கலத்திற்கு வந்த முகமது ரபீக், மீண்டும் 150 சவரன் நகைகள், விலை உயர்ந்த கை கடிகாரம் என சீர்வரிசையாக பெற்றுக்கொண்டு தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவருடனும் சிலகாலம் வாழ்ந்துவிட்டு பின்னர், 2வது மனைவி மீதும் வழக்கம்போல நடத்தை சரியில்லை என பழிபோட்டுவிட்டு அவரையும் விவாகரத்து செய்துவிடுகிறார்.




இந்தநிலையில், தற்போது மூன்றாவது முறையாக தாயகம் திரும்பிய முகமதுரபிக் தனது மூன்றாவது திருமண அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அதாவது தஞ்சை மாவட்டம், மதுக்கூர் பகுதியில் உள்ள செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் வகையில் பெண் வீட்டாரிடம் மிடுக்கான காவல்துறையில் அதுவும் வெளிநாட்டு காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுவதாக கூறி அடுத்த டார்க்கெட்டை தொடங்கியுள்ளார் முகமதுரபிக். 




வருடத்திற்கு ஒரு மனைவி என தனது வாழ்க்கையை அனுபவித்துவிட்டு அதன் பின்னர் பெண் வீட்டார் கொடுத்த சீர்வரிசை பொருட்களை அபகரித்து கொள்வதற்காக பெண்ணின் நடத்தையில் பழியைபோடும் முகமதுரபிக்கிடம், இனி எந்தவொரு பெண்ணும் ஏமாந்து விடகூடாது என்ற நோக்கத்தில் முதல் மனைவியின் குடும்பத்தார், முகமதுரபிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் முகமது ரபீக்  இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றிய தூத்துக்குடி பெண் அனீஸின் தகப்பனார் சம்சுதீன் மற்றும் குடும்பத்தார் தங்களது மகளை ஏமாற்றி திருமணம் செய்த சிங்கப்பூரைச் சார்ந்த முகம்மது ரபீக் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரை  சந்தித்து புகார் மனு அளித்தனர். 




இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தகப்பனார் சம்சுதீன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “எனது மகள் அமீர்நிஷாவை, சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் முகமது ரபீக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். திருமணத்தின் போது 101 பவுன் தங்க நகை, ரோலக்ஸ் வாட்ச் மற்றும் 13,977 சிங்கப்பூர் டாலர், பிளாட்டின மோதிரம், ரொக்க தொகையாக 5000 சிங்கப்பூர் டாலர் ஆகியவற்றை மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்தோம். ஆனால், இவர் திருமணமான ஒரு மாதத்திற்குள் குடும்பத்துடன் பெண்ணை கொடுமைப்படுத்தி தலாக் நோட்டீஸ் கொடுத்து அவரை முகமது ரபீக் வீட்டிற்கு அனுப்பிவிட்டார். மேலும் நகையையும், சான்றிதழ்களையும் அபகரித்து கொண்டார். 


மேலும் அவர் திருவாரூர் மாவட்டம் அத்திகடை என்ற ஊரில் ஒரு பெண்ணை திருமணம் செய்து இதேபோல் ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது அவருக்கு 3வது திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. மீண்டும், மீண்டும் இதுபோல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து நகைகள் கொள்ளையடிக்கும் நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து இன்னும் பல உண்மைகள் வெளிவரும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண