தூத்துக்குடியில் பணியின்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலரை பணியில் இருந்து நீக்கம் (Dismissed from Service) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.




தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் பொன்மாரியப்பன். இவர் கடந்த 09.05.2021 அன்று மத்தியபாகம் காவல் நிலையத்தில் உடல்நிலை சரியில்லை என்று காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் பிணி அறிக்கை செய்து, பிணிக்கடவுச்சீட்டு வாங்கி விட்டு சென்றவர். அதே நாள் இரவு தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த லூர்து ஜெயசீலன் என்பவரை கொலை செய்த வழக்கில் 10.05.2021 அன்று கைது செய்யப்பட்டு, பின் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நடுவர் நீதிபதி உத்தரவின்படி கடந்த 22.05.2021 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவர் மீது துறை ரீதியாக நடைபெற்ற விசாரணையில் தலைமை காவலர் மீதான குற்றம் நிரூபணம் ஆனதையடுத்து ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக் கோப்பை சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குற்றசெயல் புரிந்துள்ள தலைமை காவலர் பொன்மாரியப்பனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பணியில் இருந்து நீக்கம் (Dismissed from Service) செய்து உத்தரவிட்டார்.


எதற்காக கொலை செய்தார் தலைமை காவலர்


கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இரவு, தூத்துக்குடி மீளவிட்டான் சுடுகாட்டுப் பகுதியில் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த பேனட் மச்சாது மகன் லூர்து ஜெயசீலன் (41) என்பவர் கத்தி குத்து காயங்களுடன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை மேற்கொண்டனர்.




விசாரணையில் மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த பொன்மாரியப்பன், அவரது நண்பர் மோகன்ராஜ்(39) என்பவருடன் சேர்ந்து லூர்து ஜெயசீலனை கொலை செய்தது தெரியவந்தது. போலீஸ் சம்பந்தப்பட்டு நடத்தப்பட்ட இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமைக் காவலர் பொன் மாரியப்பனின் தாய்மாமன் அழகு என்பவரைக் கொலை செய்ததற்காக 23 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப்பழியாக இந்த கொலை நடத்தப்பட்டது தெரியவந்தது.