கோவை நேரு நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ”நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி உடன் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவார்கள். இது முதலமைச்சர் ஸ்டாலின் தந்த திட்டங்களுக்கான மணிமகுடமாக இருக்கும்.
இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் மற்றும் முகவர்களுடன் தேர்தல் நெறிமுறைகள் தொடர்பான ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க எதிர்கட்சி முயற்சிக்கிறது. ஒரு வார்டுக்கு 100 பேரை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வர வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். கலவரத்தை தூண்ட முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எதிர்கட்சிகள் வன்முறையை தூண்ட முயற்சித்தாலும், வன்முறைக்கு இடம் தராமல் திமுக கூட்டணி கட்சியினர் வாக்கு எண்ணிக்கையில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்கட்சியினர் நேற்று ஒரு மண்டபத்தில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் பங்கேற்றவர்கள் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டு, கதவுகள் மூடப்பட்டு கூட்டம் நடந்துள்ளது. அதில் ஒரு வார்டுக்கு 100 பேர் வர வேண்டுமெனவும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இருக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளதாம். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வேட்பாளர்கள், முகவர்கள் வருவது தான் நடைமுறை. ஆனால் ஆயிரக்கணக்கனோரை வரவழைத்து வன்முறை செய்ய எதிர்கட்சி சதித் திட்டமிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை சுமுகமாகவும், அமைதியாகவும் நடக்க அதிகாரிகளுக்கு திமுக கூட்டணியினர் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. சில இடங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் எதிர்கட்சியால் ஏற்படுத்தப்பட்ட சம்பவங்கள். அவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பிரச்சனை ஏற்பட்டது. வாக்குப்பதிவைப் போல வாக்கு எண்ணிக்கையும் அமைதியாக நடக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை விரைவாக நடக்க தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடந்துள்ளது. நாங்கள் ரகசிய கூட்டம் போடவில்லை. எதிர்கட்சி ரகசிய கூட்டம் நடத்தி கலவரத்தை தூண்ட திட்டமிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடக்க முழு ஒத்துழைப்பு வழங்க தயார். சட்டமன்ற உறுப்பினர் வாக்குச் சாவடி மையங்களில் ஆய்வுக்கு சென்றுள்ளார். எப்படி அவர் ஆய்வுக்கு செல்ல முடியும்? அதிகாரம் யார் கொடுத்தது? அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆய்வு என சென்றுள்ளார். அது நாங்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்க வேண்டும் என்பதை காட்டும் வகையில் இருந்தது. இது தொடர்பாக திமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. தேர்தலில் முகவரி மாற்றங்கள் இருந்ததால் பூத் சிலிப் தருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையத்திடம் தான் தர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.