திருவாரூர் அடுத்த வேலங்குடி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ராஜா கண்மணி. இவர்களுக்கு ஹரிணிகா மற்றும் கோபிகா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். ஹரிணிகா திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாணவிகள் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். ஹரிணிகாவின் அறையில் ஐந்து மாணவிகள் உடன் தங்கி உள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் பள்ளி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் வேலங்குடி வந்துவிட்டு மீண்டும் பள்ளிக்கு சென்றுள்ளார். பெற்றோர்களே ஹரிணிகாவை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஹரிணிகாவிற்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அப்பள்ளியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வாரம் மூன்று நாட்கள் நாள் ஒன்றுக்கு 15 நிமிடம் மட்டுமே தொலைபேசியில் பேச அனுமதி வழங்கப்படுகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் அந்த பள்ளி செயல்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து ஹரிணிகாவின் பெற்றோர் தங்களது மகள் உடல்நிலை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பேசி உள்ளனர் சிறிய பிரச்சனை தான் தற்போது நலமாக உள்ளார் என வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்துள்ளனர். ஆனால் வெள்ளிக்கிழமை இரவு ஹரிணிகாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து இரவு ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனை பள்ளி நிர்வாகத்தினர் அவரது பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர். பெற்றோர் உடனடியாக ஹரிணிகாவை வெளியில் அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்து நல்ல சிகிச்சை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும் பள்ளி நிர்வாகத்தினர் எந்த பிரச்சனையும் இல்லை தற்போது நலமுடன் உள்ளார் என தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் ஹரிணியின் பெற்றோர் அவரைப் பார்ப்பதற்காக பொன்னேரி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது முப்பது மணி அளவில் ஹரிணிகா இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த ஹரிணிகாவின் பெற்றோர் தங்களது மகள் நலமுடன் இருப்பதாக தெரிவித்த நிலையில் தற்போது திடீரென உயிரிழக்க என்ன காரணம் என பள்ளி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய பதில் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து வராத காரணத்தால் திருவள்ளூர் மாவட்டம் காவரப்பேட்டை காவல் நிலையத்தில் ஹரிணிகாவின் தாய் கண்மணி பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மகளுக்கு சரியான உணவு வழங்கவில்லை என்றும் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே தங்களது மகள் இறக்க காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார். புகாரின் அடிப்படையில் காவரப்பேட்டை காவல் துறையினர் சந்தேகத்திற்கிடமான மரணம் அல்லது இயற்கைக்கு மாறான மரணம் (174 CRPC) என வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஹரிணிகாவின் உடல் சொந்த ஊரான வேலங்குடிக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பள்ளி குறித்து ஹரிணிகாவின் பெற்றோர்கள் கூறுகையில், தங்களது மகள் உயிரிழந்ததற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்றும் பள்ளியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் முறையான சிகிச்சை அளித்திருந்தால் தங்களது மகள் உயிர் பிழைத்து இருப்பாள் என்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்