திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் என்பவரது மனைவி சக்தி விமலா வயது 30.இவர் திருவாரூர் மாவட்டம் எண்ணக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

 

இந்த நிலையில் கடந்த 27.04.2023 அன்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து சக்தி விமலா கும்பகோணத்தில் இருந்து கொல்லுமாங்குடி செல்லும் சாலையில் கற்கத்தி பாலம் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த வந்த இருவர் இவரது ஆறு சவரன் தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர்.

 

இதனையடுத்து புகாரியின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கற்கத்தி பாலம் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தனர்.அதில் yamaha fz இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வேகமாக செல்வது பதிவாகியுள்ளது.

 

இருப்பினும் அதில் வண்டி என்னை கண்டுபிடிக்க முடியாத அளவு வேகத்தில் அந்த இரு சக்கர வாகனம் சென்றுள்ளதால் காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் அந்த வண்டியில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர் வெள்ளை நிற செருப்பு அணிந்து செல்வதை காவல்துறையினர் கவனித்தனர்.மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கும்பகோணம் தஞ்சாவூர் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்த நிலையில் கொரடாச்சேரி கடைவீதியில் எஃப் இசட் இருசக்கர வாகனத்தில் வெள்ளை செருப்பு அணிந்த இளைஞர்கள் நின்று கொண்டிருப்பதை கவனித்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது இந்த இளைஞர்கள் தான் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

 

அதனை தொடர்ந்து நடைபெற்ற காவல்துறையினரின் விசாரணையில் சென்னை பெருங்குளத்தூரில் தங்கி இருக்கும் திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த இமானுவேல் வயது 18 கொரடாச்சேரி வடக்கு மாங்குடி பகுதியைச் சேர்ந்த கோகுலேஷ் வயது 20 ஆகிய இருவரும் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

 

மேலும் அரசு பள்ளி ஆசிரியையிடம் பறித்த ஆறு சவரண் தாலி செயினை நாகூரில் உள்ள மீனவர் ஒருவரிடம் கீழே கிடந்து எடுத்ததா கூறி 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு இமானுவேல் 50 ஆயிரத்தையும் கோகுலேஷ் 40 ஆயிரத்தையும் பங்கு பிரித்து எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது.

 

இதனையடுத்து காவல்துறையினர் அந்த செயினை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.பெரும்பாலும் சிறிய திருட்டுகளில் ஈடுபடும் இவர்கள் உடனடியாக அருகில் உள்ள மாவட்டத்திற்கு சென்று திருடிய பொருட்களை விற்று வந்துள்ளனர். குறிப்பாக பெரும்பாலும் திருவாரூர் தஞ்சாவூர் கும்பகோணம் காரைக்கால் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மேலும் கிட்டத்தட்ட கடந்த மூன்று வருடங்களாக இது போன்று பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டுள்ள இவர்கள் மீது எந்த வழக்கும் இதுவரை இல்லை என்பதும் எந்த வழக்கிலும் சிக்கிக் கொள்ளாமல் தொடர் திருட்டில் இவர்கள் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இறுதியில் வெள்ளை நிற செருப்பை மட்டும் வைத்து துப்புத் துலக்கிய காவல்துறையினர் இந்த இரு களவாணிகளையும் தட்டி தூக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.