திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கடைத்தெருவில் பகவான் மெஸ் என்கிற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் கண்ணன் வயது 53. இவரது மகன் சூர்யப்பிரகாஷ் வயது 23. இந்த நிலையில் இவரது வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலை மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான செப்பு நாணயங்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா மற்றும் கும்பகோணம் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் இலக்குமணன் ஆகியோர் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இன்று அதிகாலை கண்ணன் வீட்டில் இருந்து சிலையை வாங்க வருவது போல் நடித்து வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர் .
இதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தன்வந்திரி ஐம்பொன் சிலை 1 1/4 அடி உயரமுள்ள ராக்காயி அம்மன் வெண்கல சிலை மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முக்கால் கிலோ எடை உள்ள இரண்டு செப்பு நாணயங்கள் ஒரு காலச் சக்கரம் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து சூரிய பிரகாசிடம் நடத்திய விசாரணையில் மன்னார்குடி திருமைக்கோட்டையில் அகஸ்தியர் கோவில் கட்டுமான பணி நடைபெற்று வருவதாகவும் அந்த கோவிலை சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து சிலை மற்றும் செப்பு நாணயங்களை மாரியப்பனிடமிருந்து வாங்கி விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இந்த சிலைகள் மற்றும் செப்பு நாணயங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் மன்னார்குடியில் சிலையை விற்பனைக்காக கொடுத்த மாரியப்பன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் .
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூர் தியாகராஜர் கோயில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக வேறு சிலைகள் வைத்திருப்பதாக புகார் வந்ததையடுத்து அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் ஒரு மாத காலம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இந்த சிலை கடத்தல் விவாகரத்தில் யார் யார் உள்ளார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை என்பது சென்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த தந்தை மகன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மற்றும் செப்பு நாணயங்கள் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பது திருவாரூர் மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.