தனது மகள் காதலித்தது பிடிக்காததால் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே சிதம்பரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் துர்கா இந்த தம்பதியினரின் மகள் கிருஷ்ணகுமாரி. இந்த நிலையில் 18 வயதான கிருஷ்ணகுமாரியும் கேக்கரை பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஏசி மெக்கானிக் ஜெகன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வருவது கிருஷ்ணகுமாரியின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது அதனையடுத்து கிருஷ்ணகுமாரியின் தந்தை அய்யப்பன் பலமுறை தனது மகளை கண்டித்துள்ளார். 


தந்தையின் கண்டிப்பை மீறியும் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கிருஷ்ணகுமாரியின் வீட்டின் வாசலில் கிருஷ்ணகுமாரியும் ஜெகனும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த அய்யப்பன் இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார். அப்போது ஜெகன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. தனது மகள் தனது பேச்சை கேட்கவில்லை என்கிற ஆத்திரத்தில் வீட்டிலிருந்த நைலான் கயிற்றினால் தனது மகளின் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி செய்துள்ளார். கிருஷ்ணகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணகுமாரியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 




பின்னர் அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிருஷ்ணகுமாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் கிருஷ்ணகுமாரியின் தாயார் துர்க்கா திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அய்யப்பன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார். தலைமறைவான அய்யப்பனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஐயப்பன் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தனது மகள் காதல் விவகாரம் தனக்கு பிடிக்காததால் ஆத்திரம் அடைந்து மகளை கொல்ல முயற்சி செய்ததாக திருவாரூர் தாலுகா காவல் துறையினரிடம் ஐயப்பன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மகள் காதலித்ததால் பெற்ற மகளையே தந்தை கொலை செய்ய முயற்சி செய்திருப்பது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




தமிழகத்தில் ஆணவக்கொலை என்பது தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூரில் காதலிப்பது படிக்காமல் தனது மகளையே கொலை செய்ய முயற்சி செய்யும் செயல் நடந்திருப்பது மிகப்பெரிய கண்டனத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஐயப்பன் மீது காவல்துறையினர் கடுமையான தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் ஐயப்பன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.