திருவாரூரிலிருந்து மும்பைக்குச் சென்று அயன் பட பாணியில் தங்கம் கடத்தல். கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரை திருவாரூரில் வைத்து மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூரை சேர்ந்த ஹாஜி என்பவர் திருவாரூரில் செல் கடை வைத்திருந்துள்ளார். அப்போது திருவாரூர் மஜித்தோப்பை சேர்ந்த அவுரங்கசீப் என்பவருக்கும் ஹாஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவுரங்கசீப்பை சென்னையில் உள்ள ஒரு செல் கடையில் பணிக்கு ஹாஜி சேர்த்து விட்டுள்ளார். திருவாரூர் ஹாஜி தங்க கடத்தலில் ஏற்கனவே ரகசியமாக ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் இதற்கு அவுரங்கசீப் ஹாஜிக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சங்கர் என்பவரையும் அவுரங்கசீப்பையும் திருவாரூரை சேர்ந்த ஹாஜி தங்கம் கடத்தி வருவதற்காக மும்பைக்கு அனுப்பியுள்ளார். அங்கு அயன் பட பாணியில் தெலுங்கானாவை சேர்ந்த சங்கரிடம் இரண்டு மாத்திரைக்குள் தங்கத்தை மறைத்து விழுங்கச் செய்து அதனை சென்னை கடத்தி வந்துள்ளனர். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சங்கரை ஸ்கேன் செய்து பார்த்தபோது ஒரு மாத்திரை மட்டுமே இருந்துள்ளது. இந்த ஒரு மாத்திரையின் மதிப்பு ரூபாய் 8 லட்சம் என கூறப்படுகிறது. ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்டு ஹாஜி கும்பல் மற்றொரு தங்க கட்டி குறித்து சங்கரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் எனக்கு தெரியாது என மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹாஜி அவரை காரைக்கால் மற்றும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போதும் காணாமல் போன தங்க மாத்திரை அவரது வயிற்றில் இல்லை. இந்த நிலையில் சங்கரை ஹாஜியின் கும்பலை சேர்ந்த திருவாரூர் புறா விஜய், காரைக்கால் தியாகு அடங்கிய மூன்று பேர் கொண்ட கும்பல் தங்க மாத்திரை குறித்து கேட்டு அடித்து துன்புறுத்தி உள்ளது. தன்னை ஒரு கும்பல் மிரட்டுவதாக திருச்சி தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் சங்கர் தெரிவித்துள்ளார். அதே சமயம் தெலுங்கானா சங்கரின் மனைவி தனது கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருச்சி தனியார் மருத்துவமனைய சேர்ந்த மருத்துவரும் இதுகுறித்து மும்பை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மும்பை காவல்துறையினர் தெலுங்கானா சங்கரின் மொபைல் என்னை ட்ராக் செய்து திருச்சி தனியார் மருத்துவமனையில் இருந்து சங்கரை கடத்திச் செல்லும்போது, வழிமறித்து சங்கரை மட்டும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அவரை கடத்தி வந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அதனைத் தொடர்ந்து திருவாரூருக்கு வந்த மும்பை காவல்துறையினர் தங்க கடத்தலில் ஈடுபட்ட அவுரங்கசீப்பை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். சங்கரை கடத்திய கும்பலை சேர்ந்த திருவாரூர் புறா விஜய் என்பவரை விளமல் ஒயின்ஷாப்பில் வைத்து மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேற்கொண்டு அவர்களை அழைத்துச் சென்று மும்பையில் விசாரணை நடத்த அனுமதி கடிதம் பெற்று அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு முன்பு பல முறை இந்த கும்பல் இதேபோன்று அயன் பட பாணியில் தங்கத்தை மாத்திரையில் அடைத்து விழுங்கி கடத்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அயன் பட பாணியில் இந்த தங்க கடத்தல் கும்பல் செயல்பட்டுள்ளதும் இதற்கு மூளையாக திருவாரூரை சேர்ந்த ஹாஜி என்பவர் செயல்பட்டதும் திருவாரூர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்