திருவாரூரில் அடுத்தடுத்த வீடுகளில் இருசக்கர வாகனங்களை முகமூடி கொள்ளையர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


திருவாரூர் அருகில் புலிவலத்தில் உள்ள விஷ்ணு தோப்பு பகுதியை சேர்ந்த காளிதாஸ் வாட்டர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது பல்சர் 160 பைக்கை, திருட்டுப்பயம் காரணமாக அருகிலுள்ள பாத்திரக் கடைக்கு எதிரில் காலி இடத்தில் நிறுத்துவது வழக்கம். அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா இருப்பதனால்  கடந்த 3 வருடமாக அவர் தனது பைக்கை  அங்கு நிறுத்தி வருகிறார். 


இந்த நிலையில் முகமூடி அணிந்த 20 வயது மதிக்கத்தக்க  கொள்ளையர் அவரது பல்சர் 160 பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. அதனையடுத்து  அருகில் உள்ள கோபி என்பவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் என்.எஸ் ரக பைக்கை அந்த திருடர் நீண்ட நேரமாக சைடு லாக்கை உடைக்க முயற்சி செய்கிறார்.




அப்போது அந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் கடந்து செல்லும் போது கீழே அமர்ந்து அந்த பைக் மறைவில் ஒளிந்து கொள்கிறார். மீண்டும் எழுந்து அந்த பைக்கை உடைக்க முயற்சி செய்கிறார். அந்த பைக் பஞ்சர் என்பதால் அவரால் அதை எடுத்து செல்ல முடியாத காரணத்தினால்  கொள்ளை முயற்சியை கைவிட்டு செல்லுகின்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. துணிச்சலாக அடுத்தடுத்த வீட்டில் பைக் திருட முயற்சி செய்த முகமூடி கொள்ளையரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இரு சக்கர வாகனம் அதிக அளவில் திருட்டு போய் வருகிறது. குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்த 6 மாதத்தில் திருட்டு போயுள்ளது. இது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சில வாகனங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரு சக்கர வாகனங்களை திருடுபவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டும். மேலும் இரவு நேரத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். தற்போது சிசிடிவி காட்சிகளில் கிடைத்துள்ள தகவலை வைத்துக்கொண்டு குற்றவாளியை உடனடியாக காவல் துறையினர் கண்டுபிடித்து வேறு எந்தெந்த பகுதியில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை   விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென பொதுமக்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண