திருவாரூர் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகனான 24 வயதான சாவித் அப்பகுதியில் உள்ள ரைஸ் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது ஊருக்கு அருகில் உள்ள திருவநாதபுரத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி மகள் ஆர்த்தி என்பவரை கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆர்த்தி நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி ஆர்த்தி கர்ப்பம் தரித்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்திருக்கிறார். சாவித் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதாலும் மாணவி தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதாலும்  திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்தளது. 




இதனை அடுத்து கல்லூரி விடுமுறையின் காரணமாக வீட்டிலிருந்த மாணவி மன விரக்தி அடைந்து எலி பேஸ்ட் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இரண்டு நாள் வரை எலி பேஸ்ட் உட்கொண்டு எதுவும் செய்யாததால், வீட்டில் இது குறித்து சொல்லாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில் இரண்டு நாள் கழித்து ரத்த வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததையடுத்து  உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் .அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் இருந்த மூன்று மாத கரு  கலைந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மாணவியை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஆர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 




இதுகுறித்து மாணவியின் தரப்பில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் சாவித் மீது தற்கொலைக்கு தூண்டுதல், கற்பழிப்பு, பெண்ணை காதலித்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தலைமறைவான சாவித்தையும் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மாணவி ஆர்த்தி தரப்பினர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குவிந்தனர். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து  சாவித்தின் அம்மா மற்றும் தங்கை இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் சாவித் கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.