திருவாரூர் மாவட்டம் இளவங்கர்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் திருவாரூர் மாவட்டம் வைப்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவருடைய மகன் சதீஷ் 24 வயது. இவர் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சதீஷ் இரவு நேர ரோந்து வாகனத்தில் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார். அப்பொழுது வன்மீகபுரத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்கிற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக உமாமகேஸ்வரி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சதீஷ் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பாதுகாப்புக்காக பணிக்குச் சென்று உள்ளார். அப்போது சதீஷுக்கும் உமாமகேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தீவிரமாகி திருமணம் செய்து கொள்வதாக கூறி இருவரும் உடலுறவு வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.



 

இந்த நிலையில் சதீஷ்க்கு அவருடைய பெற்றோர்கள் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் திருமணம் செய்வதற்காக பெண் பார்த்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட உமாமகேஸ்வரி சதீஷிடம் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தான் என்னிடம் பழகினீர்கள் ஆனார் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள எப்படி சம்மதித்தீர் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சதீஷ் திருமணம் செய்ய மறுத்ததை அடுத்து உமா மகேஸ்வரி திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் நானும் சதீஷும் வெகுநாட்களாக பழகி வருகிறோம். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை என்னுடன் உடலுறவு வைத்துள்ளார். ஆனால் தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கும்பொழுது அதற்கு மறுப்பு தெரிவித்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே காவல்துறையினர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு திருமணம் செய்து வைக்கும்படி புகார் மனுவில் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.



 

உமா மகேஸ்வரி கொடுத்த புகாரை திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பெற்றுக் கொண்டு காவலர் சதீஷ் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுதல், பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் சதீஷ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் சதீஷ் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவருடைய மகன் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உள்ள சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.