திருவண்ணாமலை மாவட்டம்  கெங்கம்பட்டு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை பல மாதங்களாக அங்கு செயல்பட்டுவருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் சரவணன் மற்றும் முருகன் ஆகியோர் சேல்ஸ்மேன்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 24-ம் தேதி இரவு வழக்கம்போல் மது விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிக்கொண்டு, இருவரும் வீட்டிற்கு புறப்பட தயாராகினர். அப்போது, டாஸ்மாக் கடையின் அருகே அடையாளம் தெரியாத 2 மர்ம ஆசாமிகள் இரண்டு சக்கர வாகனத்தில் அங்கு வந்தனர்.


அதனைத்தொடர்ந்து, சேல்ஸ் மேன்களிடம் திடீரென மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் விற்பனை செய்து வைத்திருந்த பணப்பையை பறித்தனர். ஆனால், சேல்ஸ் மேன் சரவணன் பையை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம ஆசாமிகள், அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு, அவரிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சேல்ஸ் மேன்கள் சரவணன் மற்றும் முருகன் ஆகியோர் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர் அவர்கள் ஓடி வருவதற்குள், மர்ம ஆசாமிகள் 2 நபர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்று விட்டனர். 


 




 


 


இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், சரவணன் வைத்திருந்த பையில் 20 ஆயிரம் இருந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, மர்ம ஆசாமிகள் தாக்கியதில் காயமடைந்த சரவணனை காவல்துறையினர் மீட்டு காரப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர்  பவன்குமார் உத்தரவின்பேரில் போளூர் காவல்துறை துணை காவல்கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் கடலாடி ஆய்வாளர்  முரளிதரன் மற்றும் காவல்துறையினர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சைபர் கிரைம் காவல்துறையினர் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபடடனர்.


 


 




 


இந்த நிலையில் காவலர்கள் கலசபாக்கம் அருகே அருணகிரிமங்கலம் ரோட்டில் வாகன தணிக்கையில்  ஈடுபட்டனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த செங்கம் தாலுகா ஆலத்தூர் கிராமம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டனை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் வழிப்பறி செய்த ரூ.19 ஆயிரம்,இருசக்கர வாகனம் மற்றும் பட்டாக்கத்தி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மணிகண்டனுடன் தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தை சேர்ந்த இசக்கி பாண்டியனுக்கும் வயது (23) தொடர்பு உள்ளது. அவர் கோவையில் டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்த வழக்கில் கோவை மாநகரம் சரவணம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்