செய்யாறு அருகே நிலத்தகராறில் பெண்ணை வெட்டிக்கொன்றுவிட்டு, 6 நபரை சரமாரியாக வெட்டிய இளநீர் வியாபாரியை, பஞ்சர் கடைக்காரர் இரும்பு ராடால் அடித்து கொலைசெய்தார்.


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட அழிவிடை தாங்கி கிராமம், பைரவபுரம் பகுதியை சேர்ந்தவர் துலுக்கானம் வயது (75). இவரது தம்பி லட்சுமணன் வயது (70). ஆகிய இருவரும் விவசாயிகளான இவர்களுக்கு பூர்விக சொத்தான 18 ஏக்கர் நிலத்தை தலா 9 ஏக்கராக பிரித்துள்ளனர். லட்சுமணனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சரோஜாவின் மகன் செல்வம் வயது (50), 2வது மனைவி பார்வதியின் மகன் சுப்பிரமணி வயது (45). இவர் இளநீர் வியாபாரி. இவர்களுக்கிடையே 9 ஏக்கர் நிலத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகல் சுப்பிரமணி விவசாய நிலத்துக்கு வந்தபோது, செல்வம் மனைவி சங்கீதா வயது (45) துணிகளை துவைத்து விவசாய நிலத்தில் காய வைத்துள்ளார்.


 




இதைப்பார்த்த சுப்பிரமணி திடீரென இளநீர் வெட்டும் கத்தியால் துணி காய போட்டிருந்த கயிற்றை அறுத்துவிட்டாராம். இதை தட்டிக்கேட்ட சங்கீதாவையும், இளநீர் வெட்டும் கத்தியால் வெட்டியுள்ளார். இதனை பக்கத்து நிலத்துக்காரரான வெங்கடேசனின் மனைவி வேண்டாஅமிர்தம் வயது (55), தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவரது கழுத்தில், சுப்பிரமணி வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சங்கீதா வெட்டு காயத்துடன் ரத்தம் வழிந்தபடி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது வெறிபிடித்தபடி கத்தியுடன் சுப்பிரமணி அவரை துரத்திக்கொண்டே சென்றுள்ளார். பின்னர் எதிரே வந்த தனது கணவர் செல்வம், வேண்டா அமிர்தத்தின் கணவர் வெங்கடேசன் ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை சங்கீதா கூறியுள்ளார். பின்னர் சுப்பிரமணியை மடக்கி கண்டித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே செல்வம், சங்கீதா, வெங்கடேசன் ஆகிய 3 நபர்களையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அப்போது அவரை பிடிக்க முயன்ற அழிவிடை தாங்கி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாலேந்திரன் என்பவரையும் வெட்டியுள்ளார்.


 




தொடர்ந்து வெண்பாக்கம் நகர்பகுதிக்கு சென்று பஞ்சர் கடை நடத்தி வரும் காந்தி வயது (55) என்பவரிடம், 'உன்னால்தான் எனது பெயரில் நிலம் பட்டா செய்யப்படாமல் உள்ளது' எனக்கூறி அவரையும் வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்ற அவரது மனைவி லதா வயது (50) அவரையும் வெட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காந்தி, கடையில் இருந்த இரும்பு ராடை எடுத்து சுப்பிரமணியின் பின்பக்க தலையில் தாக்கியுள்ளார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெட்டுபட்டு காயமடைந்த 6 நபர்களையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சங்கீதா, லதா, காந்தி ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சொத்து பிரச்னைக்காக சொந்த அண்ணன் மற்றும் உறவினர்கள் என்று பாராமல் இளநீர் சீவும் கத்தியில் அனைவரையும் இளநீர் சீவுவது போல் சீவிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண