மலைப் பகுதியில் சாராயம் தயாரிப்பதற்காக பதுக்கி வைத்திருந்த  4 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் 500 லிட்டர் சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர்.

 

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைத்தொற்று பரவல் காரணமாக கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது . இதனால் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே  வலசை மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



 

இத்தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான காவலர்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வலசை மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 கிலோ வெல்லம் உள்ளிட்ட ரூ.4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும்   விற்பனைக்காக லாரி டியூப்பில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து  ஏஎஸ்பி கிரண் சுருதி தானிப்பாடி காவல் நிலையத்திற்கு சென்று போலீசார் பறிமுதல் செய்த கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்திய மூலப்பொருட்களை பார்வையிட்டார்.

 



பின்னர் லாரி டியூப்பில் இருந்த கள்ளச்சாராயத்தை   காவல்துறையினர் ஏஎஸ்பி கிரன்சுருதி முன்னியில் கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை சாதகமாக்கி கள்ளச்சாராயத்தை புழக்கத்தில் விட பலர் களமிறங்கியுள்ளனர். போலீசார் அவ்வப்போது பிடித்தாலும், அவர்கள் கண்ணில் மண்தூவி எங்கோ ஒரு பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து கொண்டு இருக்கிறது. விபரீதங்கள் ஏற்படும் முன் அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.