திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஸ்துவராஜ். இவர் மணலூர்பேட்டை சாலையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், சென்னையில் உள்ள அவரது மாமனார் வீட்டில் இருந்துவரும் நிலையில், கிறிஸ்துவராஜ் மட்டும் தச்சம்பட்டில் உள்ள வீட்டில் தனியாக இருந்து மீன் வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார்.


 



இந்நிலையில், மீன் வியாபாரம் செய்யும் அவரது நண்பர்கள் இன்று காலை கிருஸ்துவராஜின் வீட்டிற்கு சென்று வெளியே காத்திருந்துள்ளனர். வெகுநேரமாகியும் கிருஸ்துவராஜ் வெளியே வராததால், வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கே கிருஸ்துவராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து அக்கம்பக்கத்தினரை அழைத்துச்சென்று காட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து தச்சம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் தச்சம்பட்டு காவல்துறையினர் கிருஸ்துவராஜின் சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 




இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், கிருஸ்ததுவராஜ் உடன் நேற்று இரவு, 17 வயது சிறுவன் இருந்து வந்ததாக தகவல் கிடைக்கவே சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக  தச்சம்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவனிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் கிருஸ்துவராஜை கழுத்தறுத்து கொலை செய்ததாக அச்சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான். வாக்குமூலத்தில் என்ன கூறினான் என்று துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரையிடம் ABP நாடு நிருபர் கேட்டபோது, “கள்ளக்குறிச்சி மாவட்டம் இரடியாம்பட்டு கிராமப் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 8-ம் வகுப்புவரை மட்டுமே படித்துவிட்டு மும்பையில் ஒரு வளையல் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளான். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கம்பெனி மூடப்பட்டதால், திருவண்ணாமலை பக்கத்தில் தச்சம்பட்டு கிராமத்தில் உள்ள அவனுடைய மாமா வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது கிருஸ்துவராஜிக்கும் இச்சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் வயது வித்தியாசமின்றி நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.



இந்நிலையில் நேற்று இரவு, அச்சிறுவன் கிருஸ்துவராஜின் வீட்டிற்கு சென்றுள்ளான். அங்கு இருவரும் மது அருந்தியுள்ளார். அப்போது குடிப்பதில் இருவருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதை தலைக்கு ஏறவே இருவருக்கும் கைக்கலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன் அருகில் இருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து கிருஸ்துவராஜின் கழுத்தை சராமாறியாக அறுத்து கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகைகளையும், பணத்தையும் திருடிக் கொண்டு அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பியுள்ளான். 


கிருஸ்துவராஜ் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்ததும் எங்கள் டீமுடன் அங்கு சென்று தீவிர விசாரணை செய்தோம். அப்போது இந்தச் சிறுவனும் இறந்துபோன கிருஸ்துவராஜிவும் நேற்று இரவு ஒன்றாக மது அருந்துவதை பார்த்தகாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறவே, தலைமறைவாக இருந்த சிறுவனை கண்டுபிடித்து விசாரணை செய்தோம். விசாரணையில் ”நான்தான் கொலை செய்தேன்' என சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்” என்று அவர் கூறினார். 17 வயதே ஆன இளம் சிறார் என்பதால் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.