திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காமராஜர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம். இவருடைய மனைவி கோவிந்தம்மாள் வயது ( 75). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அங்கு இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் கோவிந்தம்மாளிடம் நைசாக பேச்சுக்கொடுத்து முதியோர் உதவித் தொகை வாங்குகிறீர்களா என கேட்டுள்ளார். அதற்கு தனக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். அப்போது அந்த வாலிபர் கோவிந்தம்மாளிடம் நான் உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தருகிறேன். எனக்கு நீங்கள் 3 ஆயிரம் பணத்தை கொடுத்தால் நான் வாங்கி தருகிறேன் என நம்பிக்கை தரும் விதத்தில் கூறியுள்ளார். இதனை நம்பிய கோவிந்தம்மாள் ரூபாய் 2 ஆயிரம் மட்டுமே உள்ளது என தெரிவித்துள்ளார். உடனடியாக வாலிபர், முதியோரிடம் நீங்கள் காதில் அணிந்திருக்கும் நகையை விற்றால் போது என்று கூறியுள்ளார்.
முதியோர் பணம் வாங்கி வருவதாக மூதாட்டியிடம் பணம் பறிப்பு
அதன் பிறகு 2 ஆயிரத்தை கொடுங்கள். மீதம் உள்ள ஆயிரம் ரூபாயை இந்த நகையை விற்று எடுத்துக்கொண்டு மீதி பணத்தை உங்களிடம் தந்து விடுகிறேன் என கோவிந்தம்மாள் கூறியுள்ளார். தனது காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்க கம்மலை கழற்றி கொடுத்துள்ளார். மேலும் வீட்டினுள் சென்று 2 ஆயிரம் பணத்தையும் எடுத்து வந்து அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிய வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார். நகை விற்ற பணத்தில் மீதமுள்ள பணத்தை அவர் தருவார் என காத்திருந்த கோவிந்தம்மாள் வெகுநேரம் ஆகியும் அந்த வாலிபர் வராததால் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உங்களிடம் நகை, பணத்தை ஏமாற்றி எடுத்து சென்று இருப்பார் என கூறியுள்ளார். அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை கோவிந்தம்மாள் உணர்ந்தார். இதுகுறித்து அவர் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வந்தவாசி தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர்.
காவல்துறையினர் விசாரணை
அதனைத் தொடர்ந்து வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராம கூட்டுச் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தினர். ஆனால் வாலிபர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடியுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை விரட்டி பிடித்தனர். பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவாமூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்று தெரியவந்தது. முருகன் தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக் கொண்டு பல்வேறு இடங்களில் வயல்வெளியில் கூலி வேலை செய்யும் முதியோர்களை மட்டும் குறி வைத்து உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பித்து விடுவது தெரியவந்தது. கோவிந்தம்மாளிடம் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி நகை, பணத்தை பறித்துக்கொண்டு தப்பியதை முருகன் ஒப்புக்கொண்டார்.
போலீசார் என கூறி மது பிரியர்களிடம் பணம்பறிப்பு
மேலும் அவரிடம் காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது முருகன் காவல்துறை அதிகாரி என்று கூறி மது பிரியர்களிடம் பணத்தை பறித்து செல்வதும், செஞ்சி பகுதியில் வழியில் சென்ற நபரிடம் 43 ஆயிரத்து 300 ரூபாயும் செய்யாறு பகுதியில் வயதான மூதாட்டியிடம் நகைகளை அடமானம் வைத்து பணம் தருகிறேன் என்று கூறி தங்க நகைகளை பறித்ததையும் இவர் ஒப்புக்கொண்டார். இவர் கொள்ளை அடித்த பணத்தை வைத்து பண்ருட்டியில் டிராவல்ஸ் நடத்தி வருவதும் 3 போலியான முகவரியில் அடையாள அட்டை இருந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இவர் மீது பல மாவட்டங்களில் வழக்குகள் உள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். முருகனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.