திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜம்னாமரத்தூரில் அரசு தொழிற்பயிற்சி நிலைய விடுதி காப்பாளராகவும், ஜவ்வாது மலையில் உள்ள பாலவாடி பழங்குடியினர் அரசு உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் அருணகிரி என்பவர் உள்ளார். அவரது மனைவி சாந்தி, பாலவாடி, தோப்பூர், கல்யாண மண்டை ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளராக உள்ளார். இந்த நிலையில் மாணவ மாணவிகளின் உணவுக்காக விடுதியில் வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை அருணகிரியும், அவரது மனைவி சாந்தி, ரேஷன் கடைகளுக்கு வரும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களையும் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக புகார்கள் வந்தன. நேற்றிரவு அருணகிரி வீட்டில் இருந்து அரிசி, பருப்பு மூட்டைகளை சிலர் வேனில் ஏற்றி கொண்டிருந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போளூர் வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.



அதன் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தனி தாசில்தார் ஜெகதீசன் மற்றும் பறக்கும் படையினர் ஜம்னாமரத்தூருக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள அருணகிரி வீட்டில் இருந்து பொருட்களை ஏற்றி கொண்டிருந்த வேனை மடக்கி பிடித்தனர். ரேஷன் கடை விற்பனையாளர் சாந்தி இவருடைய வீட்டில் நேற்று இரவு பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது 168 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். அப்போது அறை முழுக்க மளிகை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து அந்த மளிகை பொருட்கள் பறிமுதல் செய்து தராசு வைத்து எடை போட்டு பார்த்தனர். அதில் 50 கிலோ துவரை பருப்பு, 3 கிலோ கடலைப் பருப்பு, 50 கிலோ பாசிப்பருப்பு, 11 கிலோ தனியா, 50 கிலோ உளுத்தம் பருப்பு, 3 கிலோ கொண்டை கடலை, 4 கிலோ மிளகு, 5 கிலோ சீரகம் ஆகிவையும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. 



இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விடுதி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உணவு பொருட்களை சரிவர வழங்காமல் அதனை களவாடி வீட்டில் பதுக்கி வைத்தது கணவனும் மனைவியும் போட்டா போட்டி போட்டு கொண்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.  மலைவாழ் மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசியை களவாடி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் கடை விற்பனையாளர் சாந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட வழங்கல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி பரிந்துரை கடிதம் அனுப்பி  உள்ளார்.



இது குறித்து பறக்கும் படை தாசில்தார் ஜெகதீசன் கூறுகையில், ஜவ்வாதுமலை ரேஷன் கடைகளில் மாதத்தில் 12 நாட்கள் மட்டுமே கடையை திறந்து ஒரே சமயத்தில் கூட்டத்தை சேர்த்து பொருட்கள் விபத்து அதன்பிறகு ஸ்டாக் காலியாகி விட்டது என கூறி கடைகளை மூடுவது தெரியவந்தது எனவே ஜவ்வாதுமலை ரேஷன் கடைகளில் இனி கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.