திருவள்ளூரைச் சேர்ந்தவர் அர்சத் அஜ்மல். இவர் விலையுயர்ந்த சைக்கிள் ஒன்றை வைத்துள்ளார். அந்த சைக்கிளில் அவ்வப்போது நண்பர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த சூழலில், கடந்த மாதம் 29-ந் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் "எனக்கு மிகவும் விருப்பமான என்னுடைய ரயில் நிலையம் அருகே இருந்த எனது குடியிருப்பிற்கு அருகே மர்ம நபர்களால் திருடப்பட்டுவிட்டது. கண்டுபிடிக்க உதவ வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். மேலும், அந்த பதிவை முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் டேக் செய்திருந்தார்.
இதையடுத்து, கடந்த 2-ஆம் தேதி அவரது சைக்கிளை ஒரு இளைஞர் திருடும் வீடியோவையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் திருடப்பட்ட சைக்கிளை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளூர் மாவட்ட நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருடப்பட்ட சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளனர். மேலும், இந்த பதிவை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும் டேக் செய்துள்ளனர்.
காவல்துறையினர் தனது சைக்கிளை கண்டுபிடித்து தந்துள்ளதற்கு அர்சத் அஜ்மல் ட்விட்டர் மூலமாக நன்றி தெரிவித்துள்ளார். தனது பதிவில் "எனது சைக்கிளை மீட்க கடினமான பங்களிப்பை அளித்த காவல்துறையினருக்கு நன்றி. மிகப்பெரிய சலூட்" என்று பதிவிட்டுள்ளார்.