திருப்பத்தூர் மாவட்டம் எர்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (46) இவர் தேமுதிக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட செயலராக உள்ளார் . திருமணம் ஆகி குழந்தைகளுடன் வசித்து வரும் ஹரிகிரிஷ்ணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஞானவேல் என்ற இளைஞருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. 24 வயதாகும் ஞானவேல் எர்ரம்பட்டி பகுதியில் உள்ள பெண்களிடம் தொடர்ந்து கேலிகிண்டல் செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் . இதில் ஹரிகிரிஷ்ணனின் உறவினர் பெண்களும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது ஆன பெண்ணை ஞானவேல் காதலித்து வந்ததாகும் அதற்கு ஞானவேலின் நண்பர்கள் உறுதுணையாக உள்ளதாகவும் தெரிகிறது. இந்த விஷயம் பெண்ணுடைய பெற்றோருக்கு தெரியவர ஹரிகிருஷ்ணனிடம் , ஞானவேலை கண்டிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர் .
உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஞானவேல் மற்றும் அவரது நண்பர்களை , இதுபோன்ற செயல்களை தொடரக்கூடாது என்றும் மீறினால் காவல் நிலையத்தில் புகார் செய்து , ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன் என்று ஹரிகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். இந்த சம்பவத்தில் சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் கைகளுப்பு நடைபெற்றதாக , போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது .
இந்நிலையில் நேற்று இரவு திருப்பத்தூரில் இருந்து எர்ரம்பட்டிக்கு ,தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த ஹரிகிரிஷ்ணனை ஞானவேல் மற்றும் அவர்களது கூட்டாளிகள் வழி மறித்து , "ஏன் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் தெருவில் வண்டியை இவ்வளோ வேகமா ஓட்டி வரீங்க, இதுக்கு எல்லாம் போலீஸ் புடிக்க மாட்டாங்களா " என்று வம்பு இழுத்துள்ளனர் .
இதனை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் முத்தவே , அருகில் இருந்த கிராம மக்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர் .
இந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட ஹரிகிரிஷ்ணனின் மூத்த சகோதரர் மாதேஸ்வரன் (48 ), சம்மந்தப்பட்ட ஞானவேல் மற்றும் அவனது கூட்டாளிகளை தட்டிகேட்க சென்றபோது , மீண்டும் ஞானவேலின் கூட்டாளிகள் மாதேஸ்வரனிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர் , மேலும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது .
இதில் ஞானவேல் மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ் (27) துளசி(30) மற்றும் கதிர்வேலு(25) ஜிடி குப்பம் பகுதியைச் சேர்ந்த பெருமாள்(25) ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் , மாதேஸ்வரனை கழுத்து மாற்று நெஞ்சு பகுதியில் தாக்கி உள்ளனர் .
பின்னர் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் குறிக்கீட்டால் வீட்டுக்கு சென்ற மாதேஸ்வரன் , சிறிது நேரத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தன் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார் . உடனடியாக அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது , அங்குள்ள மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . மேலும் இன்று ஹரிகிருஷ்ணன் கொடுத்த பேரின் பேரில் , கந்தலி போலீசார் , ஞானவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .