நெல்லை மேலப்பாளையம் அருகே மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவருக்கு வயது 36, இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் வீட்டு உபயோகப் பொருள் விற்பனை நிலையத்தில் பணி செய்து வருகிறார். இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் நேற்று இரவு கடையில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு குறுக்குத்துறை வழியாக வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வயல்வெளியின் அருகே நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் அவரது இருசக்கர வாகனத்தை மறித்து வெட்ட முயற்சித்துள்ளனர்.
இதனை தடுத்த அவர் அருகில் இருந்த வயல்வெளியில் தப்பி ஓடிய நிலையில் கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அங்கேயே வெட்டி விட்டு தப்பி சென்றனர். இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் வயல்வெளியில் அலறல் சத்தம் கேட்டு பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் ஒருவர் துடித்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக அவர்கள் நெல்லை சந்திப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வயல் வெளியில் உயிரிழந்த நிலையில் கிடந்த மாயாண்டியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சரவணகுமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து கொலையாளிகளை உடனடியாக பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். கொலை நடந்த இடத்தில் மோப்பநாய் பரணி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.
இதனிடையே காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், மேல நத்தத்தில் உள்ள ஒரு வீட்டில் கிரைண்டர் திருடு போயுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாயாண்டி ஒரு சிலரை கண்டித்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த மாயாண்டியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது. மேலும் கொலை நடத்த இடத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நெல்லை மாநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இரண்டு கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்ற சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்