நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்தவர் செல்வம் மகன் 30 வயதான மாரியப்பன். இவர் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான பிரேமா என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரித்தனர்.


இதையடுத்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி மாரியப்பன், பிரேமா ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும், அவர்கள் சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர் இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. 


இந்தநிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். பிரிவிற்கு பிறகு மாரியப்பன் அசாமிலும், பிரேமா சென்னையிலும் வசித்து வந்துள்ளனர். 


கடந்த ஆண்டு மாரியப்பன், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே, மாரியப்பன் தனது முதல் மனைவி பிரேமாவுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.




கடந்த 9-ந் தேதி பிரேமாவும், மாரியப்பனும் சொந்த ஊரான திருக்குறுங்குடிக்கு வந்துள்ளனர். அதன்பின்னர் பிரேமா திடீரென்று மாயமானார். இதற்கிடையே, மாரியப்பன் தனது மனைவியை கொன்று விட்டதாக மதுபோதையில் சிலரிடம் உளறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் தெரிவிக்கப்பட்டது. போலீசார், மாரியப்பனை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.


மாரியப்பன் 2-வது திருமணம் செய்து கொண்டாலும்,. பிரேமாவிடம் அடிக்கடி செல்போனில் பேசிவந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுமுறையில் வந்த மாரியப்பன் சென்னையில் பிரேமாவை சந்தித்து பேசினார். அப்போது பிரேமா, மகளின் படிப்பு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மாரியப்பன்,பிரேமாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அவரை ஊருக்கு செல்லலாம் என்று நைசாக பேசி கடந்த 9-ந் தேதி திருக்குறுங்குடிக்கு அழைத்து வந்தார். ஆனால், அவர் வீட்டிற்கு அழைத்து செல்லாமல் அங்குள்ள பெரியகுளம் பகுதிக்கு சென்று பிரேமாவிடம் பேசிக் கொண்டு இருந்தார்.


அப்போது, அவர்களுக்குள் மீண்டும் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் தான் அணிந்து இருந்த துண்டால் பிரேமா கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், குளத்தின் கரை அருகில் குழித் தோண்டி அவரது உடலை புதைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து மாரியப்பனை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் பிரேமா உடல் புதைக்கப்பட்ட இடத்தை மாரியப்பன் போலீசாருக்கு அடையாளம் காட்டினார். நாங்குநேரி தாசில்தார் முன்னிலையில் பிரேமா உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண