திருடச் சென்ற வீட்டிற்கு சென்று திருடன் மன்னிப்பு கேட்ட சம்பவம் ஈரோடு அருகே நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. 


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் சிங்கப்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அதேசமயம் ஈரோட்டில் உள்ள ரமேஷ் வீட்டில் மனைவி சரண்யா, மகன் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். இவர்கள் விட்டில் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. 


இதனிடையே கடந்த மார்ச் 9 ஆம் தேதி தனது வீட்டில் மாட்டப்பட்டிருந்த இன்டெர்நெட் கேபிஸ் துண்டிக்கப்பட்டிருப்பதை சரண்யா பார்த்துள்ளார். சரி அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஏதாவது மோதி இப்படி நடந்திருக்கலாம் என நினைத்து வழக்கம்போல அன்றாட பணிகளை கவனிக்க தொடங்கியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களை வரவழைத்து இன்டர்நெட் இணைப்பை சரிசெய்துள்ளார்.


அன்றைய தினம் இரவு சரண்யா வீட்டுக்குள் யாரோ ஏறி குறிப்பது போல சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக வீட்டின் மின்விளக்குகளை போட்டு சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினரும் அங்கு வரவே திருட வந்த நபர் தப்பி ஓடியுள்ளார். இதனைத் தொடந்து வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த நபர் யார் என்பதை ஆய்வு செய்துள்ளார்.


மேலும் சிசிடிவி காட்சிகளை அக்கம் பக்கத்தினரிடமும் கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. நேற்று மதியம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சரண்யா வீட்டுக்கு வந்துள்ளார். யாரென்று தெரியாத நிலையில் விசாரிக்க சரண்யா வாசல் கதவை திறந்ததும் அந்த நபர் சட்டென காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும்  “நான் தான் உங்கள் வீட்டுக்கு சில தினங்கள் முன்பு திருட வந்தேன். அதை நினைத்து வருத்தப்படுகிறேன். என்னை மன்னிச்சு விடுங்க. போலீசில் மட்டும் பிடித்துக்கொடுக்க வேண்டாம்” எனவும் கூறியுள்ளார். 


சரண்யாவின் மாமியார் பாவம் பார்த்து திருடனை விட்டு விடலாம் என சொல்ல, அவரும் சரி என தலையாட்டியுள்ளார். பின்னர் தண்ணீர் கொண்டு வருகிறேன் என சொல்லிவிட்டு உள்ளே சென்றவர், உடனே போனில் அழைத்து அக்கம் பக்கத்தினரை வரவழைத்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த நபர் சூரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பதும், கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 


மேலும் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டை குறி வைத்து திருடி வந்ததாகவும் கூறியுள்ளார். இன்டர்நெட் கேபிளை துண்டித்து விட்டால் திருடலாம் என நினைத்த அவர், சரண்யா சிசிடிவி ஆய்வு செய்வது குறித்து தெரிய வந்துள்ளது. இதனால் மன்னிப்பு கேட்க வந்துள்ளதும் விசாரணையில் வெளிவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.