அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி (வயது 60). இவர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் அந்த ஆடுகளை நேற்று இரவு கட்டிவிட்டு சாப்பிட்டு படுத்து தூங்கினார். இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகள் திடீரென்று சத்தம் போட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த தங்கசாமி வெளியே சென்று பார்த்தார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் 2 ஆடுகளின் வாயில் டேப் ஒட்டி கால்களை கட்டி கார் டிக்கியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். உடனே தங்கசாமி திருடனை பிடியுங்கள் என கத்தினார். அதைத்தொடர்ந்து பக்கத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் தூக்கம் கலைந்து எழுந்து ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் ஆடுகளை திருடிக்கொண்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்ட வெள்ளை நிற சொகுசு காரை துரத்திச் சென்றனர்.




இதையடுத்து வாரியங்காவல் மெயின் ரோடு பகுதியில் அந்த சொகுசு கார் நிலை தடுமாறி சாலை தடுப்புச் சுவரில் மோதியது. இதில் முன்பக்க டயர் அந்த சுவரில் ஏறி இறங்கியதால் மேலும் காரை நகர்த்த முடியவில்லை. இதற்கிடையே துரத்திச் சென்ற இளைஞர்களும் அங்கே விரைந்து சென்று விட்டனர். இதனால் பயந்து போன மர்ம நபர்கள் ரெண்டு பேரும் காரில் இருந்து இறங்கி தப்பித்தோம், பிழைத்தோம் என புதருக்குள் தப்பி ஓடி விட்டனர்.




பின்னர் இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அந்த காரை சோதனையிட்டபோது காரின் டிக்கியில் 4 ஆடுகளும், காருக்குள் 4 ஆடுகளும் வாயில் டேப் ஒட்டப்பட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆடுகளை குளத்தூர், வாரியங்காவல், இலையூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு திருடியுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 2 மாதங்களில் மட்டும் ஆண்டிமடம், மேலூர், குளத்தூர் வாரியங்காவல், இலையூர் ஆகிய 5 கிராமப் பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட ஆடுகள் திருட்டு போய் உள்ளன. இதனை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.