கள்ளக்குறிச்சியில் ஒரே வீட்டில் 3 பேர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள நரிமேடு காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். இவர் மினி லாரியில் ஊர், ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி வளர்மதி (வயது 37). இவர்களுக்கு தமிழரசன் (11) என்ற மகனும், கேசவன் என்ற 8 மாத ஆண் குழந்தையும் இருந்தது.
பூட்டிய வீட்டுக்குள் மரணம்:
கேசவன் பிறப்பதற்கு முன்பு, அதாவது வளர்மதி கர்ப்பமாக இருந்த போதே, மணிகண்டன் சாலை விபத்தில் இறந்து விட்டார். அதன்பிறகு குழந்தை பெற்ற வளர்மதி, தனது 2 ஆண் குழந்தைகளையும் வளர்த்து வந்தார். வருமானத்திற்காக தன்னுடைய கணவர் விட்டு சென்ற வியாபாரத்தை அவர் செய்ய ஆரம்பித்தார். அவரும் மினி லாரிக்கு டிரைவர் போட்டு, ஊர், ஊராக காய்கறி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்துக்காக காலையில் வெளியே செல்லும் அவர், எப்போது வீட்டுக்கு வருவார் என்று அக்கம் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கு கூட தெரியாதாம். இந்நிலையில், நேற்று முன்தினம் வளர்மதி வீட்டில் இருந்து யாரும் வெளியே நடமாடவில்லை. அவரது வீட்டில் இருந்து மாலையில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் இதுபற்றி கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சிமெண்டு ஷீட்டால் கட்டப்பட்ட அவரது வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை திறந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அங்கே வளர்மதி, அவரது மகன் தமிழரசன், 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகிய 3 பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
கொலை:
அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு அவர்களை கொலையாளிகள் வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இறந்த கிடந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் வீட்டை சுற்றி பார்த்த போது, அங்கே வளர்மதி வளர்த்த கன்றுக்குட்டி கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தது. 10 கோழிக்குஞ்சுகள் வாளி தண்ணீருக்குள் மூழ்கடித்து சாகடிக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். ஆனால், இந்த கொலைக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் கொலையாளிகள் போலீசார் தங்களை பிடித்து விடக்கூடாது என்பதற்காக இறந்த 3 பேர் உடல்களிலும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். அதற்கு அடையாளமாக அவர்களது உடல்களிலும், வீட்டிலும் ஆங்காங்கே மிளகாய் பொடிகள் சிதறி கிடந்தன. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் சோதனை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, முக்கிய தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் ராக்கி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்து. அந்த நாய் வீட்டை சுற்றி, சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 குழந்தைகளோடு தாயை கொலை செய்தது யார்?, இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரனையில் ஈடுபட்டனர்.
திடுக் தகவல்கள்:
வளர்மதியின் தந்தை ரங்கநாதனுக்கு 4 மனைவிகள். இதில் 2-வது மனைவி அஞ்சலையின் மகள் வளர்மதி ஆவார். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டுவதற்காக வளர்மதி, உறவினர் செங்குறிச்சியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி விமலா என்ற அஞ்சலையிடம்(50) ரூ.22 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் கடன் தொகையை திருப்பி தரவில்லை. இதனால் வளர்மதியிடம், விமலா தனக்கு தர வேண்டிய பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அவர், நீங்கள் பணம் கொடுத்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது, பணம் தரமுடியாது என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விமலா, வளர்மதி மற்றும் அவருடைய 2 குழந்தைகளையும் கொலை செய்து விட்டால், அந்த இடம் மற்றும் வீடு தனக்கு சொந்தமாகிவிடும் என முடிவு செய்தார். இதற்காக ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தில் உள்ள தனது உறவினர் சுப்பிரமணியனின் மகன்கள் தமிழ்ச்செல்வன் (27), பூபாலன் (30) ஆகியோரை தொடர்பு கொண்டு கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
கழுத்தறுத்துக் கொலை:
அதன்படி கடந்த 17-ந்தேதி இரவு 9 மணியளவில் விமலா மற்றும் பூபாலன், தமிழ்செல்வன், இவரது நண்பர் நாகை மாவட்டம் கடலங்குடியை சேர்ந்த நாகராஜன் மகன் ராமு (24), சின்னப்பன் மகன் சிவா (39) ஆகியோர் வளர்மதியின் வீட்டுக்கு சென்றனர். வளர்மதியின் வீட்டின் அருகே பூபாலன், சிவா ஆகியோர் நின்று கொண்டு யாராவது வருகிறார்களா என்று நோட்டமிட்டனர். முதலில் விமலா கதவை தட்டினார். வளர்மதி கதவை திறந்ததும், உள்ளே சென்ற விமலா நலம் விசாரிப்பது போல் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியில் வந்து சைகை காட்டினார். உடனே தமிழ்செல்வனும், ராமுவும் வீட்டுக்குள் செல்லவும், அஞ்சலை வெளியில் கதவு தாழ்ப்பாளை போட்டு விட்டார்.
பின்னர் தமிழ்செல்வன் மற்றும் ராமு ஆகியோர் சேர்ந்து வளர்மதியை தாங்கள் கொண்டு வந்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். அப்போது தூங்கிக் கொண்டிருந்த தமிழரசன் எழுந்து சத்தம் போட்டதும் அவனையும், 8 மாத கைக்குழந்தையையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் மோப்பநாய் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்காக மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி சென்றுள்ளனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து விமலா, தமிழ்ச்செல்வன், ராமு, பூபாலன், சிவா ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.