'சிங்கார வேலனே தேவா' என்ற கடினமான பாடல் மூலம் முதன்முதலாக நமக்கெல்லாம் அறிமுகமான ஒரு குரலுக்கு சொந்தக்காரர் பின்னணி பாடகி எஸ். ஜானகி. இன்றைய  தொழில்நுட்பங்கள் கொஞ்சம் கூட அறிமுகமாகாத அந்த காலத்திலேயே அத்தனை கடினமான பாடலை கத்துக்குட்டியாக இருந்தாலும் ஒரே டேக்கில் அநாயாசமாக பாடி பெரிய பெரிய இசை ஜாம்பவான்களை எல்லாம் பிரமிக்கும் அளவிற்கு பாடி அசத்திய எஸ். ஜானகியின் 85 வது பிறந்தநாள் இன்று. 


 


இளையராஜாவுடன் கூட்டணி:


ஒரே பாடலில் தென்னிந்திய முழுவதும் பிரபலமானாலும் அவரால் முதலிடத்தை பிடிக்க சற்று காலதாமதம் ஏற்பட்டது. தமிழ் சினிமாவில்  இசைஞானி இளையராஜாவின் வரவும், எஸ். ஜானகியின் குரலும் சேர்ந்து மேஜிக் நிகழ்த்தியது. ஒன்றா இரண்டா இவர்களின் கூட்டணியில் விருந்தாக அமைந்தது எண்ணற்ற பாடல்கள். எஸ். ஜானகியின் திறமையை முழுமையாக பயன்படுத்தி ட்ரீட் கொடுத்தது இளையராஜா மட்டுமே. 


இளையராஜா - எஸ். ஜானகி என்ற இந்த கூட்டணியில் சேர்ந்த மற்றுமொரு ஈடு இணையில்லா குரலோன் எஸ்.பி.பி. இந்த மூவரும் சேர்ந்தால் அந்த பாடல் எப்படி வெற்றி பெறாமல் போகும். சிறப்பாக பாட கூடியவர் மட்டுமல்ல எஸ். ஜானகி அந்த பாடலின் உணர்ச்சியை உள்வாங்கி அதற்கு ஏற்றார் போல கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பாட கூடிய வித்தகர். கொஞ்சம் கூட உணர்ச்சியை உடல் அசைவிலோ அல்லது முகத்திலோ காட்டாமல்  குரலில் மட்டுமே அவற்றை கொண்டு வரும் சிறப்புமிக்கவர் எஸ். ஜானகி மட்டுமே. இது அவருக்கு மட்டுமே உரித்தான இயல்பு. 


 



48 ஆயிரம் பாடல்கள்:


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மட்டுமின்றி கொங்கணி, துளு என 17 மொழிகளில் 48,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர்.  ஐந்து தலைமுறை ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்த பெருமை ஜானகியையே சேரும். மேலும் ஹிந்தியில் அதிகமான பாடல்களை பாடிய ஒரே தென்னிந்திய நடிகை ஜானகி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. வெரைட்டி, மாடுலேஷன் மட்டுமின்றி குழந்தைகள் முதல் பாட்டி வாய்ஸ் வரை அனைத்தையும் தனது குரலில் கொண்டு வர கூடியவர். ஆண் குரலை கூட ஜானகி அம்மா விட்டு வைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும் பல ஹிட் பாடல்களை பாடிய எஸ். ஜானகி அனைத்து தலைமுறையினர்க்கும் தனது இனிமையான குரலை கொண்டு சேர்த்தவர். 


திறமை இருக்கிறது, வாய்ப்பு வருகிறது என நான் மட்டும் பாடி கொண்டே இருப்பதில் நியாயமில்லை. வருங்கால தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும் என தனது இசை துறையில் இருந்து ஓய்வு பெற்று கொண்ட பெருந்தன்மை கொண்ட மாமனிதி எஸ். ஜானகி. அவரின் குரலில் வந்த கேட்க கேட்க தெவிட்டாத பாடல்களை கேட்டு அவர் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.