தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள கணேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் ( 49). இவர் அப்பகுதியில் விவசாய வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு போதுமணி (45) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு சூர்யா (28), சுகன் (24) என்ற 2 மகன்களும், நாகஜோதி (22) என்ற மகளும் உள்ளனர். நாகஜோதி திருமணமாகி, வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார். சூர்யா திருமணமாகி பெற்றோருடன் ஒரே வீட்டில் குடியிருந்து வருகிறார். சுகன் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இந்நிலையில் நேற்று காலை பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் போதுமணி தெரிவித்தார்.



இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது மனைவி, மகன்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் 3 பேரும் சேர்ந்து பாலமுருகனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தததாக ஒப்பு கொண்டனர்.


இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மது பழக்கத்திற்கு அடிமையான பாலமுருகன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி போதுமணி, மகன் சூர்யாவுடன் தகராறு செய்து வந்ததாகவும். குடும்பத்தினர் பலமுறை கண்டித்தும் பாலமுருகன் மதுப்பழக்கத்தை கைவிடவில்லை. இதுகுறித்து போதுமணி, இளைய மகன் சுமனிடம் செல்போனில் தகவல் கொடுத்தார்.



இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுகன் கணேசபுரத்திற்கு வந்ததாகவும், இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பாலமுருகன் மது குடித்து விட்டு வந்து மனைவி, மகன்களிடம் தகராறு செய்ததாகவும். அப்போது ஆத்திரமடைந்த மனைவி, மகன்கள் 2 பேரும் சேர்ந்து பாலமுருகனை தாக்கி கீழே தள்ளினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை 3 பேரும் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர். பின்னர் பாலமுருகனை தூக்கில் தொங்க விட்டனர். இதையடுத்து ஒன்றும் நடக்காதது போல் இருந்த 3 பேரும் நேற்று காலையில் பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் நாடகமாடி உள்ளனர் என்று தெரிவித்தனர். விவசாயியை அவரது குடும்பத்தினரே கொலை செய்த சம்பவம் கடமலைக்குண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர