தேனி அருகே வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் சரவணன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஊஞ்சம்மாள் (41). இவர்களுடைய மகன் கமலேஸ்வரன் (18). இவர் பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 14-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வெளியே சென்ற கமலேஸ்வரன் இரவு வரை வீடு திரும்பவில்லை. மறுநாள் மாலையில் பூதிப்புரம் கல்லூருணி காடு செல்லும் சாலையில் ஒரு தனியார் தோட்டத்து கிணற்று மேட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கமலேஸ்வரன் உடல் கிடந்தது. இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.கொலை செய்யப்பட்ட கமலேஸ்வரனின் தாய், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது மகன் போடேந்திரபுரத்தை சேர்ந்த தன்னாசி மகளை காதலித்ததாகவும், அதனால், தன்னாசி (50), அவருடைய மனைவி தமிழ்செல்வி (45) ஆகியோர் கொலை செய்து இருப்பதாகவும் கூறி இருந்தார்.



அதன்பேரில், தன்னாசி, தமிழ்செல்வி இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய புலன் விசாரணையில், மாணவர் கமலேஸ்வரனை தன்னாசி சரமாரியாக வெட்டி கொலை செய்ததாகவும், அவருடைய மனைவி தமிழ்செல்வி, மகன் ஜெயப்பிரகாஷ் (27) ஆகியோர் இந்த கொலைக்கு உடந்தையாகவும், தூண்டுதலாகவும் இருந்ததாக தெரியவந்தது.இதையடுத்து தன்னாசி, தமிழ்செல்வி, ஜெயப்பிரகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை போலீசார் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கைதான தன்னாசி போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், 'எனது மகளுடன், கமலேஸ்வரன் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகி பழகி வந்தார். பின்னர் அவர் எனது மகளை காதலித்தார். இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி வந்ததாக எனக்கு தெரியவந்தது. நான் கமலேஸ்வரனை வீட்டுக்கு சென்று கண்டித்தேன்.



ஆனாலும் அவர் எனது மகளை தொடர்ந்து காதலித்து, வெளியில் அழைத்துச் சென்றதாக தெரியவந்தது. சமீபத்தில் நடந்த வீரபாண்டி திருவிழாவுக்கும் மகளை அழைத்துச் சென்றதாக கேள்விப்பட்டேன். இதனால் கமலேஸ்வரனை கொலை செய்ய முடிவு செய்தேன். சம்பவத்தன்று இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அவரை வழிமறித்து மறைத்து வைத்து இருந்த பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினேன். அதில் அவர் இறந்து விட்டார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் போலீசார் பிடித்து விட்டனர்' என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார்   தரப்பில் கூறப்பட்டது.  மாணவர் கமலேஸ்வரனை கொலை செய்வதற்கு தன்னாசி முன்கூட்டியே திட்டம் தீட்டி செயல்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கொலை சம்பவம் நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பே தன்னாசியின் செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.



அது போலீசாருக்கு அவர் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியது. மேலும், அவர், கொலை நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே அந்த வழியாக நோட்டமிட்டுச் சென்றுள்ளார். அது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த கொலை வழக்கில் தன்னாசிக்கு அவருடைய நண்பர் ஒருவர் திட்டம் தீட்டிக் கொடுத்து உடந்தையாக இருந்ததாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. அதன்பேரில் அவருடைய கூட்டாளியையும் போலீசார் தேடி வருகின்றனர்.கைதான தன்னாசி மீது கண்டமனூர் காவல் நிலையத்தில் 2007-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கு உள்ளது. மேலும், அவர் மீது திருட்டு, வழிப்பறி, மதுவிற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண