நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் தெற்குதெரு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவரது வீட்டிற்கு நேற்று இரவு சுமார் 10 மணியளவில் , நல்ல உடல் பருமன் கொண்டஅரை டவுசர் ஆசாமி ஒருவர் சென்றுள்ளார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை நோட்டம் விட்டபடியே பின் தொடர்ந்துள்ளனர்.



 

‛என்னடா... இது... நம்ம பின்னாடியே இந்த பயலுக வறானுங்க...’ என சுதாரித்த அந்த இளைஞர், நடப்பதும், நிற்பதுமாய் பின்னால் வருவோரை சோதித்துள்ளார் . அவர் நிற்கும் போது, பின்னால் வந்தவர்கள் நின்றுள்ளனர். அவர் நடக்கும் போது, பின்னால் வந்தவர்கள் நடந்திருக்கிறார்கள். ‛சரி தான்... சைத்தான் சைக்கிள்ல வருது...’ என்பதைப் போல, தன்னை சுத்து போட்டதை அறிந்த அந்த இளைஞர், தனது நடையை லேசாக லேசாக ஓட்டமாக மாற்றினார். ஓட ஆசை தான்... ஆனால், உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. 



சுமார் 300 மீட்டர் தூரம் ஓடியதற்குள், 30 இடத்தில் கீழே விழுந்து விழுந்து விழுந்து ஓடிய திருடனை, மடக்கிப் பிடித்த கிராம மக்கள், அங்குள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். இதில் அரை டவுசர் போட்ட அந்த இளைஞர், தான் சென்னையை சேர்ந்த வினோத்ராஜ் என்றும் ஏற்கனவே அதே பகுதியில் காணாமல் போன கணேசன் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை தான் திருடியதையும்  ஒப்புக்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி  போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் இரவு நேரங்களில் கைதிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்க கூடாது என்ற உத்தரவினால், கிராம மக்களே திருடனை விடிய விடிய காவல் காத்தனர். ‛நான் தான் காயுறேன்... நீங்க ஏன் காயுறீங்க...’ என்பதைப் போல, அவர்களை அந்த திருடன் பார்த்துள்ளார். விடியுற வரை வேறு வழியில்லை என குழுக்களாக நின்று காவல் காத்து, அந்த திருடரை காலையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அரை டவுசர் திருடனின் அசால்ட் விசிட், அங்குள்ள மக்களை பீதியடையச் செய்துள்ளது. 

சமீபகாலமாக, பொதுமக்களை ஏமாற்றவும், அனுதாபத்தை பெறவும், இது போன்ற ஆடைகளை அணிந்து, பொது இடங்களில் உலா வரும் திருடர்கள், நோட்டமிட்டு வேண்டியதை திருடிச் செல்கின்றனர். எனவே, இதுபோன்றவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் பொதுமக்கள் இருக்க வேண்டும். அதே போல பிடிபடும் திருடர்களை, முறைப்படி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களை துன்புறுத்தவோ, சீண்டவோ நமக்கு சட்டரீதியான உரிமை இல்லை. 

அந்த வகையில், திருடனை சாமர்த்தியமாக பிடித்த இந்த மக்கள், அவரை துன்புறுத்தாமல், அதே நேரத்தில் இரவு முழுக்க பாதுகாத்து ஒப்படைத்திருப்பது பாராட்டுக்குரிய விசயம்.