தமிழகத்தில் ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்தது. எனவே ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்து கடந்த 21.11.2020 அன்று தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த சில நாட்களுக்கு முன்பு நீக்கினார். இதனால் தற்போது அதில் விளையாடி பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. அது மட்டுமின்றி ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் தலைதூக்க தொடங்கி உள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள சேர்ந்தனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (32). இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆஷா(28) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நித்தியஸ்ரீ என்ற இரண்டு வயது மகள் இருக்கிறாள்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பச்சையப்பன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். மனைவி மற்றும் மகளுடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஆஷா, எதற்காக வேலைக்கு செல்லவில்லை என்று கேட்டார். அதற்கு பச்சையப்பன், செல்போனில் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடியதாகவும், அதில் தோற்று அதிக பணத்தை இழந்து விட்டதாகவும் கதறி அழுதபடி கூறினார். மேலும் அவர் வைத்திருந்த செல்போனையும் தரையில் எறிந்தார். இதில் அந்த செல்போன் சுக்குநூறாக உடைந்தது.
மன உளைச்சலில் இருந்த பச்சையப்பன், நேற்று மாலை வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு ஆஷா கதறி அழுதார்.
இது குறித்த தகவலின் பேரில் வளவனூர் போலீசார் விரைந்து சென்று, பச்சையப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்டதற்கு பிறகு மீண்டும் தற்கொலைகள் தொடங்கியிருப்பது வேதனையளிக்கிறது அன்புமணி ராமதாஸ் ட்விட்
தமிழ்நாட்டுல அந்த சம்பவமே கிடையாது ராதாகிருஷ்ணன் அதிரடி..| Corona | Vaccine | Covishield | Covaxin