தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அயன்விருசம்பட்டி கிராமத்தில் விஜயக்குமார் என்ற லாரி டிரைவர் வீட்டில் வைத்து மது அருந்தியதை தட்டிக்கேட்ட அவரது தந்தை ஆத்தியப்பன் ஆடைகளை களைந்தது மட்டுமின்றி, கத்தியுடன் தந்தையை நோக்கி வந்தால், பயத்தில் ஆத்தியப்பன் படியில் தவறி விழுந்து பரிதபமாக உயிரிழந்தார். போலீசார் உடலைகைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விஜயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆத்தியப்பன் நெடுங்குளம் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் பணி செய்து வந்த நிலையில் 10 தினங்களுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அயன் விருசம்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் ஆத்தியப்பன் (60). இவரது மனைவி மாரியம்மாள், இந்த தம்பதிக்கும் விஜயக்குமார் (30),  குருசாமி, முருகேசன் என்ற 3 மகன்களும், குருலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இதில் குருலெட்சுமிக்கு திருமணமாகி கணவருடன் தூத்துக்குடியில் வசித்து வருகிறார். மற்றவர்களுக்கு திருமணமாகவில்லை.




ஆத்தியப்பன் நெடுங்குளம் குடிநீர் விநியோகிப்பவர் பணி செய்து கடந்த 10 தினங்களுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றுள்ளார். ஆத்தியப்பன் மூத்த மகன் விஜயக்குமார் தூத்துக்குடியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வரும் போது மது அருந்தி விட்டு வீட்டில் விஜயக்குமார் தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. வழக்கம் போல இன்றும் விஜயக்குமார் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு மது போதையில் வந்ததாக தெரிகிறது.




மேலும் தான் வாங்க வந்த மதுபாட்டில்களை வீட்டில் விஜயக்குமார் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை ஆத்தியப்பன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியுள்ளது. இதில் விஜயக்குமார் தனது தந்தையை தாக்கியது மட்டுமின்றி, அவரது ஆடைகளை களைந்து வெளியே ஏறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆத்தியப்பன் வீட்டில் இருந்து வெளியே வந்து அருகில் இருந்த வேல்ராஜ் என்பவர் வீட்டில் மாற்றுத்துணி வாங்கி உடுத்திக்கொண்டு, வீட்டிற்கு செல்ல பயந்து வேல்ராஜ் வீட்டு வாசல்படி அமர்ந்து இருந்துள்ளார்.




அப்போது மது போதையில் தள்ளாடிக் கொண்டு இருந்த விஜயக்குமார் கையில் கத்தியுடன் ஆத்தியப்பனை நோக்கி வந்துள்ளார். இதனை பார்த்த ஆத்தியப்பன் பயத்தில் எழுந்து ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி கீழே விழுந்து பரிதாபமாக சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்தும் விளாத்திகுளம் போலீசார் விரைந்து சென்று ஆத்தியப்பன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




மேலும் வழக்கு பதிவு செய்து விஜயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் வைத்து மது அருந்தியதை கண்டித்த தந்தையின் ஆடையை களைந்தது மட்டுமின்றி, கத்தியுடன் வந்ததால், பயத்தில் தந்தை படியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.