திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த காடையூர் பகுதியை சேர்ந்தவர் சிவபிரதீப் (22). அரிசி ஆலை உரிமையாளரான இவர், தனது இன்னோவா காரில் டிரைவர் சதாம் என்பவருடன் தனது அரிசி ஆலையில் இருந்து நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீரசோழபுரம் சாலையில் டாடா சுமோ காரில் எதிரே வந்த 7 நபர்கள் சிவபிரதீப் வந்த காரை மறித்து, காருடன் சேர்த்து திண்டுக்கல் சிறுமலைக்கு கடத்திச் சென்றனர்.


பின்னர் சிவபிரதீப்பின் தந்தை ஈஸ்வரமூர்த்திக்கு டிரைவர் சதாம் போன் மூலம் தொடர்பு கொண்ட கொள்ளையர்கள்  3 கோடி ரூபாய் கொடுக்க வில்லை எனில், தங்கள் மகனை கொன்று புதைத்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ந்து போன ஈஸ்வரமூர்த்தி தனது மகனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பணம் பெற்று உடனடியாக 3 கோடி ரூபாய் பணத்தை தயார் செய்து திண்டுக்கல் மாவட்ட எல்லைக்கு சென்றுள்ளார். அங்கு  சிவபிரதீப்பை தங்களுடன் பிடித்து வைத்துக் கொண்டு டிரைவர் சதாமை தங்கள் ஆள் ஒருவருடன் அனுப்பி 3 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டனர். பின்னர் தங்கள் டாடா சுமோ காரில் பணத்தை ஏற்றியவுடன்  சிவபிரதீப், டிரைவர் சதாம் இருவரையும் காருடன் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தனது மகனுடன் பத்திரமாக வீடு திரும்பிய பின்னர் இன்று காலை காங்கேயம் காவல் நிலையத்தில் சிவபிரதீப் புகார் அளித்தார். அதன் பேரில்  வழக்கு பதிவு செய்த போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.




இந்த விசாரணையில் திண்டுக்கல் சாலையில் பல்வேறு பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் எண் உள்ளிட்ட தடயங்கள் சிக்கியது. அதன் அடிப்படையில் கொள்ளையர்கள் பணத்தை பெற்று மதுரைக்கு சென்றது தெரியவந்தது. உடனடியாக  மதுரை சென்ற தனிப்படை போலீசார் அங்கு தனி வீடு ஒன்றில் பதுங்கியிருந்த 3 பேர் தங்கள் பங்கு பணத்தை பிரித்துக் கொண்டு இருந்த போது, அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து 1 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரித்த போது கொள்ளையில் ஈடுபட்ட டாடா சுமோ டிரைவர் பசீர் (32) என்பவர் கிருஷ்ணகிரி சென்றுள்ளதை தெரிவித்தனர். உடனடியாக கிருஷ்ணகிரி சென்ற போலீசார் பசீரை கைது செய்து அவரிடமிருந்த 20 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.




இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது சக்திவேல்(37), பாலாஜி(38) என்ற இருவரும் சிவபிரதீப் அரிசி ஆலையில் கிரேன் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்ததாகவும், ஊரடங்கு காலத்தில் பணியை விட்டு சொந்த ஊருக்கு சென்ற நிலையில் உடனடியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது.  சிவபிரதீப் வசதியானவர் என்பதால் பல கோடி ரூபாய் இருக்கும் என்பதால், அவரை கடத்தினால் எந்த ஆபத்தும் இன்றி கோடிகளில் பணம் பெறலாம் என திட்டமிட்டுள்ளனர். உடனடியாக தங்கள் நண்பரான மதுரையை சேர்ந்த  அகஸ்டின்(45) என்பவரை தொடர்பு கொண்ட இவர்கள் அவரின் உதவியுடன் டிரைவர் வேவு பார்க்க ஆள் என மேலும் சிலரை சேர்த்துக் கொண்டு சிவபிரதீப்பை நோட்டமிட்டு அவரை கடத்தியது தெரியவந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.




புகார் கொடுக்கப்பட்ட 6 மணி நேரத்தில் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 1 கோடியே 89 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்ட சம்பவத்தில் விரைந்து செயலாற்றிய போலீசாருக்கு மேற்கு மண்டல ஐஜி சுதாகர் பாராட்டு தெரிவித்தார்.