கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சத்திய பாண்டி. 32 வயதான இவர், டிரைவராக பணி புரிந்து வந்தார். ரவுடியாக இருந்த இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 12 ம் தேதியன்று இரவு நவ இந்தியா பகுதியில் இருந்து ஆவராம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடைக்கு அருகே தனது நண்பர்களுடன் சத்திய பாண்டி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் தலைகவசம் அணிந்தபடி, 2 மோட்டர் சைக்கிளில் வந்தனர். அந்த கும்பல் அங்கு நின்று கொண்டிருந்த சத்திய பாண்டியை திடீரென அரிவாளால் வெட்டினர். இதனால் அச்சம் அடைந்த சத்திய பாண்டி உயிர் பிழைக்க அங்கிருந்து ஓடத் துவங்கினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்தி சென்றது. இதையடுத்து அக்கும்பலிடம் இருந்து தப்பிக்க சத்திய பாண்டி சாலையோரம் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டி சென்று அந்த வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.


இதில் சத்திய பாண்டிக்கு தலை, கை, கால், உடல் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சத்திய பாண்டி துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து பந்தயசாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக காஜா உசேன், சஞ்சய் குமார், ஆல்வின், சல்பர் கான், சஞ்சய் ராஜா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனிடையே கரட்டுமேடு பகுதியில் மறைத்து வைத்திருந்த கொலைக்கு பயன்படுத்திய கை துப்பாக்கியை காவல் துறையினர் கண்டறிய சென்ற போது, சஞ்சய்ராஜா துப்பாக்கியால் காவல் ஆய்வாளரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால் தற்காப்பிற்காக காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் சஞ்சய்ராஜா காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், சஞ்சய் ராஜா தனது நண்பரான கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும் கோவையில் தங்கி இருந்த தில்ஜித் (44) என்பவருடன் சேர்ந்து தித்திட்டம் தீட்டி சத்தியபாண்டியை கொலை செய்தது தெரியவந்தது. இந்தநிலையில், தலைமறைவாக இருந்த தில்ஜித்தை காவல் துறையினர் தேடி வந்தனர். அவர் கடந்த 3 மாதங்களாக டெல்லி, மும்பை கொல்கத்தா என வெளிமாநிலங்களில் தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில் தில்ஜித் கோவை வந்து இருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அவரை நேற்றிரவு பந்தயசாலை காவல் துறையினர் கைது செய்ய சென்றனர். காவல் துறையினரைப் பார்த்ததும் தில்ஜித் தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது நிலை தடுமாறி கீழே விழிந்ததில் கால் எலும்பு உடைந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட தில்ஜித்தை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் காவல் துறையினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு காவல் துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண