சேலத்தில் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பிடிபட்ட வாலிபருக்கு காவல்துறையினர் உதவுவதாகக் கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள கீரைகார தெருவில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் தினேஷின் வீட்டில் அவரது மனைவி மற்றும் தாய் இருந்த போதும் முன்பின் தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் நுழைந்து உள்ளார். வீட்டில் இருந்த நபர்கள் யார் என்று விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். உடனே திருட வந்ததை உணர்ந்து கொண்ட தினேஷின் மனைவி அருகில் இருந்த பொதுமக்கள் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பிடிபட்ட வாலிபரை பிடித்து வந்து காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர். 



அவரிடம் காவல்துறையினர் பேசிக்கொண்டிருந்தபோது, பொதுமக்கள் ஒரு சிலர் இந்த வாலிபரை தாக்கியதாக தெரிகிறது. பின்னர் பிடிபட்ட வாலிபரிடம், "நீ புகார் கொடுத்தால் நீதான் வெற்றி பெறுவாய்" என்று காவலர்கள் யோசனை கூறியதாக, பொதுமக்கள் கூறிக் கொண்டு, காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட வாலிபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (24) என்றும், கோவில் திருவிழாக்களில் ராட்டினம் இயக்கும் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறை இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த காவல்துறை அதிகாரியிடம் கேட்ட போது, சமீபத்தில் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் விசாரணை கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் அழிந்தது, இந்த நிலையில் இன்று திருடன் என கூறப்பட்ட பிரசாந்தை பலமுறை காவல்துறையினர் எச்சரித்தும் பொதுமக்கள் அவரை கடுமையாகத் தாக்கினர். இதனால் அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு காவல்துறையினரே காரணம். அதனால்தான் பிடிபட்ட திருடனை கைது செய்யாமல் விசாரணை நடத்தினோம். பொதுமக்கள் அதை புரிந்துகொள்ளாமல் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், வீட்டில் பெண்கள் தனியாக இருந்தபோது திடீரென வீட்டிற்குள் நுழைந்து "என்னை தெரியவில்லையா" என்று உரிமையோடு கேட்டுள்ளார். பின்னர் நாங்கள் திருடன் என கண்டறிந்த பின் அரிசி வாங்க வந்ததாக கூறியுள்ளார். பொதுமக்களை அழைத்து திருடனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தால் காவல்துறையினர் அஜாக்கிரதையாக திருடரிடம் பேசிக்கொண்டு புகார் அளித்த அவர்கள் மீது புகார் கொடுக்கச் சொன்னார் என்று கூறினார். இதனால் அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.