கோவை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி ஆட்சியர் வீட்டு பொருட்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பணம் கொள்ளையடித்த வாலிபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணன் உண்ணி. இவர் சமீபத்தில் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் பங்களாவில் இருந்த அவரது பொருட்களை நேற்று முன் தினம் மினி லாரியில் ஏற்றி தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணியின் பொருட்களை ஏற்றிய பின்னர், வாகனம் சேலம் - கொச்சின் புறவழிச்சாலை வழியாக கேரளா மாநிலத்தை நோக்கி சென்றது. கோவை அவினாசி சாலை வழியாக, பாலக்காடு நோக்கி புறவழிச்சாலையில் அந்த வாகனம் சென்றது.
இதனிடையே மதுக்கரை - நீலாம்பூர் புறவழிச்சாலையில் உள்ள கஞ்சிக்கோணம்பாளையம், செட்டிபாளையம் சாலை சந்திப்பிற்கு அருகே லாரி நள்ளிரவில் 3 மணியளவில் சென்ற போது, பைக்கில் பின்னால் வந்த 3 பேர், லாரி டிரைவரான சென்னையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (35) என்பவரிடம் டயர் பஞ்சராக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்தி டயரில் காற்றின் அளவு குறைந்து விட்டதா எனப் பார்த்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேரும் அவரை சுற்றி வளைத்து கத்தியை காட்டி மிரட்டினர். லாரியில் டிரைவர் முத்து கிருஷ்ணன் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை பறித்த அவர்கள் அங்கேயிருந்து தப்பி சென்றனர்.
இது தொடர்பாக முத்து கிருஷ்ணன் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு, பணம் கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். புறவழிச்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா, சுங்கச்சாவடி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பைக்கில் வந்த 3 நபர்களும் வாலிபர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் லாரியை கடத்தி சென்று கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. லாரியை கடத்தி செல்ல முயற்சி செய்து அது முடியாமல் போனதால் அவர்கள் பணத்தை கொள்ளையடித்து தப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது. கலெக்டர் வீட்டில் இருந்து விலை மதிப்புள்ள பொருட்கள் பேக்கிங் செய்து வாகனத்தில் ஏற்றியிருப்பதாக தெரிகிறது. இந்த வாகனத்தை பகலில் எடுத்து செல்லாமல் இரவில் எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாகனத்தில் உள்ள பொருட்களை லாரியுடன் திருடும் நோக்கத்தில் இந்த கொள்ளை நடந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். நள்ளிரவில் கலெக்டரின் வாகனத்தை மடக்கி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்