விழுப்புரம் : போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த ஓட்டல் மாஸ்டர் இறந்த விவகாரத்தில் அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் கண்காணிப்பக மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், மக்கள் பாதுகாப்புக்கழக தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.


அப்போது அவர்கள் கூறியதாவது:-


விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் வசித்து வந்தவர் ராஜா. இவருக்கு அஞ்சு என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ராஜா, திருப்பச்சாவடிமேட்டில் உள்ள டாஸ்மாக் கடை உணவகத்தில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 9-ந்தேதி வழக்கம்போல் இரவு வேலை முடித்துவிட்டு ராஜா, அங்குள்ள உணவகத்திலேயே படுத்து தூங்கினார். மறுநாள் 10-ந் தேதி காலை ரோந்துப்பணியில் ஈடுபட்ட தாலுகா போலீசார், ராஜாவை சந்தேகத்தின்பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர் ராஜா, 10 மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து சொந்த ஜாமீனில் விட்டுள்ளனர்.


போலீசார் தாக்கியதால் இறந்தார்


அன்று காலை 10.30 மணியளவில் வீட்டிற்கு வந்த ராஜா, தன்னை போலீசார் பூட்ஸ் கால்களால் தாக்கியதாகவும், அதனால் நெஞ்சு பகுதியில் அதிகமாக வலி இருப்பதாகவும் மனைவி அஞ்சுவிடம் கூறியிருக்கிறார். உடனடியாக ராஜாவை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பிறகு அருகில் உள்ள மேற்கு போலீஸ் நிலையத்தில் ராஜாவின் மனைவி அஞ்சுவை போலீசார் அழைத்து, அவரது கணவர் வீட்டிலேயே இறந்து விட்டதாக ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். பின்னர் அவசர, அவசரமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ராஜாவின் உடலை எடுத்துச்சென்று ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுவெல்லாம் போலீசாரின் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதாக சந்தேகம் அடைந்த அஞ்சு, நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருந்தார். இதையறிந்த போலீசார், ராஜாவின் உடலை எரிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். ஆனால் அஞ்சு, தனது உறவினர்களின் ஒப்புதலோடு விழுப்புரம் கே.கே.சாலை சுடுகாட்டில் ராஜாவின் உடலை புதைத்துள்ளார்.



மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு


இதையடுத்து மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் மூலமாக அஞ்சு, சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். அதில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், போலீஸ் நிலையத்தில் வைத்து அவரை போலீசார் தாக்கியதால்தான்  உயிரிழந்தார் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ராஜாவின் உடலை 8 நாட்களுக்குள் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், திருச்சி, சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மூலமாகவோ அல்லது மதுரை, நெல்லையில் உள்ள மருத்துவர்கள் மூலமாகவோ மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இறந்து 40 நாட்கள் ஆன நிலையில் உள்ள ராஜாவின் உடலை முழுவதுமாக ஸ்கேன் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உண்மையான காரணம்?


எனவே ராஜாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து அதன் அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் அவரது குடும்பத்தினரிடம் வழங்க மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கை மாஜிஸ்திரேட்டின் விசாரணைக்கு உத்தரவிட்டு ராஜாவின் சாவுக்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினர். ஆகவே ராஜாவின் உடல் தோண்டப்பட்டு மறு பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. இதன் பரிசோதனை அறிக்கை முடிவில்தான் ராஜாவின் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும்.