திருப்பூரில் கள்ளத் தொடர்பினால் ஏற்பட்ட தகராறில் பனியன் தொழிலாளி அடித்துக் கொலை செய்து எரிக்கப்பட்ட வழக்கில், 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் கல்லாங்காடு அருகே உள்ள பயன்படுத்தப்படாத கற்குவாரி உள்ளது. இங்கு மழை நீர் தேங்கிய பாறைக்குழியில், அவ்வப்போது குப்பைகள் கொட்டப்பட்டு எரியூட்டப்படுவது வழக்கம். இந்நிலையில் பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதை அப்பகுதியினர் பார்த்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை காவல் துறையினர் ஆராய்ந்தனர்.
அப்போது திருவாரூர் மாவட்டம் ஆரணியம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 37) என்பவரை காணவில்லை என்ற புகார் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சந்தோஷ்குமார் தனது மனைவி கீதா மற்றும் இரண்டு குழந்தையுடன் திருப்பூர் காலேஜ் ரோட்டில் வாடகை வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள பிரின்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் தனது கணவரை காணவில்லை என கீதா, வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
திருப்பூர் கல்லாங்காடு திருகுமரன் நகர் பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி (வயது 50) என்ற பெண்ணுடன் சந்தோஷ்குமார் பல நாட்களாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். தேனியை சேர்ந்த முருகேஸ்வரி தனது கணவரை பிரிந்து திருப்பூரில் தனது மகனுடன் வசித்து வருகிறார். முருகேஸ்வரி தொடர்பில் இருந்த சந்தோஷ்குமாரிடம் பல முறை பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் 17ஆம் தேதி முருகேஸ்வரி வீட்டுக்குச் சென்ற சந்தோஷ்குமார், கொடுத்த பணத்தை வட்டியுடன் கேட்டு தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேஸ்வரியின் மகன் ஆரோக்கியதாஸ் (வயது 25) மற்றும் அவருடைய நண்பர் பாலசுப்பிரமணியன் (வயது 26) ஆகியோர் சந்தோஷ்குமாரை தனியே மது அருந்த அழைத்து இரும்பு கம்பியை எடுத்து தலையில் பலமாக அடித்து கொலை செய்துள்ளனர். பின்பு உடலை மறைக்க இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று, திருப்பூர் கல்லாங்காடு பாறைக்குழி பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்து மண்ணைப் போட்டு மூடி விட்டு சென்று விட்டனர்.
போலீசார் விசாரணையில் ஆரோக்கியதாஸ் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தனது அம்மா முருகேஸ்வரி தூண்டுதலின் பேரில் அடித்து கொலை செய்ததாகவும், கொலை செய்த சந்தோஷ் குமாரை பாறைக்குழியில் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.