சேலம் மாவட்டம் தொளசம்பட்டி நச்சுவாயனூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிசாமி - லதா தம்பதியின் 14 வயது மகன்  சபரி காணாமல் போனதாக கடந்த 23-ஆம் தேதி தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இதனிடையே லதா பணியாற்றிய வந்த ஜவுளி கடை உரிமையாளர் சரவணன் செல்போனுக்கு நேற்று (27.08.2021) வந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் பழனிசாமி - லதா தம்பதியின் மகனை கடத்தி வைத்துள்ளதாக கூறி ரூபாய் 50 லட்சம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. 



இதனைத்தொடர்ந்து மற்றொரு எண்ணிலிருந்து சரவணன் செல்போனிற்கு சிறுவன் சபரி ரகசிய அறையில் அடைத்து கட்டி வைக்கப்பட்டது போன்ற வீடியோ ஒன்று நேற்று வந்துள்ளது. உடனடியாக  இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.


செல்போன் அழைப்புகள் இன் அடிப்படையில் தனிப் படையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சிறுவனை கடத்திய நபர் சேலம் சீலநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த செல்வ குமார் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து செல்வகுமாரை அதிரடியாக கைது செய்தனர்.  இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ்,  சிறுவன் கடத்தல் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு செல்வகுமார் அந்த நபரை கைது செய்ததாகவும், முதல் தொடர்ச்சியாக செல்வகுமாரின் பட்டறையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவன் சபரியை மீட்டதாகவும் தெரிவித்தார். 



கடத்தப்பட்ட சிறுவனுக்கு ஆறு நாட்களாக உணவு கூட கொடுக்காமல் அடைத்து வைக்கப்பட்டதால் சிறுவன் சபரி ஆபத்தான நிலையில் இருந்த காரணத்தால் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிறுவன் சபரி கூச்சல் இடாமல் இருப்பதற்காக மயக்க மாத்திரை கொடுத்து, வாயில் பிளாஸ்திரி கொண்டு ஒட்டி இருந்ததாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட செல்வகுமார் இடம் மேற்கொண்ட விசாரணையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிறுவனை கடத்தியதாகவும், ஆனால் அவரது பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதால் அவனது தாயார் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளி சரவணனுக்கு பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்தது. 


இதற்காக செல்போன்களை திருடி மாற்று எண்ணிலிருந்து வீடியோவை அனுப்பியதாக காவல்துறையினரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தெரிவித்தார். சிறுவன் கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த தகவல் கிடைத்தவுடன் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு அவர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும் செல்வகுமார் இதற்கு முன் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.