வேலூரில் இருந்து  திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த அரசு பேருந்து போளூர் பைபாஸ் சாலையில் வந்துகொண்டு இருந்த போது, பயணிகளின் பயணச்சீட்டுகளை பரிசோதிக்க 2 பரிசோதகர்கள் பேருந்தில்  ஏறினர். அப்போது , டிக்கெட் பரிசோதனையில் அவர்கள் ஈடுபட்டனர். திடிரென பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 3 நபர்களிடம் டிக்கெட் இல்லாமல் இருந்தது. இதற்கு அந்த பயணிகள் நாங்கள் ஏற்கனவே டிக்கெட் எடுத்துவிட்டோம், கவனக்குறைவாக எங்கு வைத்தோம் என தெரியவில்லை எனக்கூறியுள்ளனர். இதனால் பயணிகளுக்கும், பரிசோதகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த நடத்துநர் , பரிசோதகரிடம் சென்று இவர்கள் 3 நபர்களும் டிக்கெட் எடுத்துள்ளனர். வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 2 டிக்கெட்டும், கணியம்பாடியிலிருந்து திருவண்ணாமலைக்கு 2 டிக்கெட்டும் எடுத்துள்ளார்கள். பேருந்தில் உள்ள பயணிகள் எண்ணிக்கைக்கும், டிக்கெட் எண்ணிக்கைக்கும் சரியாக தான் உள்ளது என தெரிவித்தார்.


 


 




 


இதற்கிடையே கலசபாக்கம் அருகே வந்த போது, பெண் பயணிகளிடம் பரிசோதகர், அபராதம் செலுத்தியே ஆக வேண்டும் என கறாராக கூறியுள்ளார். அதற்கு பெண் பயணி என்னிடம் பணம் இல்லை எனக்கூறியுள்ளார். திருவண்ணாமலையில் இருந்து கிராமத்திற்கு செல்வதற்கு மட்டும் தான் 50 ரூபாய் உள்ளது. நான் டிக்கெட் எடுத்துவிட்டேன். எதற்கு எனக்கு அபராதம் விதிக்கின்றீர்கள். இது என்ன அராஜகம் என பெண்மணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் மனித நேயம் இல்லாமல் 2 பெண் பயணிகளை போக்குவரத்து வசதி இல்லாத நடுவழியில் டிக்கெட் பரிசோதகர்கள் இறக்கிவிட்டனர். இதனால் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.இதற்கிடையில், வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணம் செய்த பயணி தன்னிடம் இருந்த டிக்கெட்டை டிக்கெட் பரிசோதகரிடம் சென்று காட்டியதற்கு நீ டிக்கெட்டை காலதாமதமாக என்னிடம் காட்டினாய், இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீ அபராதம் 200 ரூபாய் செலுத்தியே ஆக வேண்டும் என கறாராக தெரித்தார்.


 


 




 


பின்னர், அந்த பயணி செய்வதறியாமல் தவித்து 200 ரூபாய் அபராதத்தை செலுத்தியுள்ளார். அதனை பெற்றுக்கொண்ட பரிசோதகர், அதற்கான ரசீதையும் கொடுக்கவில்லை. பேருந்தில் பிரச்னை அதிகரிக்கும் போது, இரண்டு பரிசோதகரில் ஒருவர் மட்டும் மவுனம் சாதித்தார். பேருந்து பயணம் செய்த மக்கள் செய்வதறியாது திகைத்தனர். பேருந்து பயணம் செய்ய டிக்கெட் காண்பித்தும் பயணியிடம் அபராதம் வசூலித்ததும், பெண்கள் என பாராமல் மனிதநேயமின்றி 2 பெண்களை நடுவழியில் இறக்கி விட்ட சம்பந்தப்பட்ட பரிசோதகர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.