புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது70). இவரது மூத்த மகள் கவுரி. இவரது கணவர் ராஜி. இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபராம் செய்து வருகிறார். இவர்களது மகன் சுரேஷ். இவர் உழவர்கரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி தலைவராக உள்ளார். சீனிவாசன் வீடு 3 மாடியில் அமைந்துள்ளது. வீட்டின் கீழ் தளத்தில் 4 அறைகள் உள்ளது. வீட்டின் முன்புறம் சுரேஷ் பாரதிய ஜனதா அலுவலகம் நடத்தி வருகிறார். அதே தளத்தில் சீனிவாசன், அவரது மனைவி ஜோதி (60), 2-வது மகள் சாந்தி (42), இளைய மகள் எழிலரசி (38), சீனிவாசன் பேத்திகள் தீபிகா (15), ஸ்ரீ (14) ஆகியோர் வசித்து வருகிறார்கள்.




இன்று காலை சீனிவாசன் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. வீடும் உருக்குலைந்தது. வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து கிடந்தது. வீட்டில் இருந்த ஜோதி, எழிலரசி, சிறுமி ஸ்ரீ ஆகியோர் தீக்காயத்துடன் சத்தம் போட்டனர். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். கோட்ட தீயணைப்பு அலுவலர் இளங்கோ, நிலைய அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் முத்தியால்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வீடு முற்றிலும் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.




வீட்டின் மேல் தளத்தில் ஜோதி சிக்கி கொண்டார். அவரை மாடி வழியாக இறங்கி ஸ்டிரக்சர் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். எழிலரசி மற்றும் சிறுமி ஸ்ரீயையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜோதி, எழிலரசி ஆகியோர் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டில் இருந்த சாந்தி, தீபிகா ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். வீட்டின் பின்பக்க அறையில் இருந்ததால் சீனிவாசன் காயமின்றி தப்பினார்.


சீனிவாசன் வீட்டில் வைக்கப்பட்டடிருந்த பிரிட்ஜ் எரிந்து உருக்குலைந்து காணப்பட்டது. ஆனால் சிலிண்டர் அப்படியே இருந்தது. மேலும் சுரேஷ் நடத்தி வந்த பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ‌ஷட்டர் பெயர்ந்து அப்பகுதியில் உள்ள சந்தில் விழுந்து கிடந்தது. சீனிவாசன் வீட்டின் அருகில் இருந்த வீடுகளிலும், எதிரில் உள்ள வீடுகளிலும் கீறல் விழுந்துள்ளது. மேல் மாடியில் உள்ள வீட்டின் ஜன்னல், கதவுகள் இறுகி விட்டது. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.




பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்தான் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால் யாராவது கட்சி அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தீயணைப்புதுறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சீனிவாசன் வீட்டில் உள்ள சிலிண்டர் அப்படியே உள்ளது. பிரிட்ஜ் மட்டும்தான் தீபிடித்து எரிந்துள்ளது. மேலும் மின்கசிவு ஏற்பட்டதற்கான எந்த தடயங்களும் இல்லை. எனவே கட்சி அலுவலகத்தில் யாராவது நாட்டு வெடிகுண்டை வீசி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்கு பின்னரே இது தொடர்பான முழுவிவரம் தெரியவரும் என்றார்.