திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு பேரூராட்சி அண்ணா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் வயது (37), இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் அண்ணா தெருவில் தாய், மற்றும் அவருடைய சகோதரியுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் தனக்கு சேர வேண்டிய இடம் அளவு குறைவாக உள்ளதாக பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு சொந்தமான இடத்தை சரியாக அளந்து தரும்படி பலமுறை மணிகண்டன் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். பலமுறை நிலம் அளவீடு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அளவீடு செய்யப்பட்டது சரியாக வரவில்லை என்றும் நிலஅளவையர்கள் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்றும், பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி மணிகண்டன், சேத்துப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தின் உச்சியில் ஏறிகொண்டு மரக்கிளைகளில் கயிறு கட்டிக் கொண்டு தூக்கில் தொங்கி விடுவேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


 




 


இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு காவல்துறையினர் மற்றும் தாசில்தார் கோவிந்தராஜ் ஆகியோர் விரைந்து வந்து தற்கொலையில் ஈடுபட்ட மணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மணிகண்டனை மீட்க முயற்சி செய்தனர். அப்போது மரத்தில் யாராவது ஏறினால் நான் தூக்குப்போட்டு தொங்கி விடுவேன் என அதிகாரிகளை மிரட்டினார். அப்போது மணிகண்டன் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும், எனக்கு சேர வேண்டிய இடத்தை சரியான முறையில் அளந்து என்னுடைய இடத்தை மீட்டு தர வேண்டும் என்று மரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு மணிகண்டன் போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்த அண்ணா தெரு மக்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் மணிகண்டனுக்கு ஆதரவாக தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


 




 


பின்னர் காவல்துறையினர், நில அளவையரை உடனடியாக வரவழைத்து முறையாக அளந்து உடனே தீர்வு காணப்படும். என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். மேலும் மணிகண்டனிடம் உடனடியாக நில அளவீடு செய்வதாக உறுதி அளித்தனர். பின்னர் மணிகண்டன், மேலிருந்து கீழே இறங்கினார். சுமார் ஒரு மணி நேரம் மரத்தின் உச்சியில் தற்கொலை செய்வதாக ஓட்டுநர் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060