மதுரை மாவட்டத்தில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிர்வாக பொறியாளராக பாஸ்கரன் இருந்துவருகிறார். இவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தன. பாஸ்கரன் தன்னுடைய துறை சார்ந்த பணிகள் அனைத்திற்கும் லஞ்சப் பணம் பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது. சொகுசு பங்களா, சொகுசு கார்கள் வாங்குவதிலும் அதிக நாட்டம் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு புராஜெக்ட் முடிந்த பின்னரும் டிரீட் கொடுக்க சொல்லி தொல்லை செய்வாராம்.
இந்நிலையில் பாஸ்கரன் சிலரிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்துவந்துள்ளார். இதனால் சம்மந்தப்பட்ட நபர் சி.பி.ஐ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாஸ்கரனை சி.பி.ஐ தொடர்ந்து மறைமுகமாக கண்காணித்து வருகிறது. இதனடிப்படையில் பாஸ்கரனின் செல்போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்களையும் சி.பி.ஐ. காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவரது செல்போன் உரையாடலின் போது மத்திய பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிகளை எடுத்து நடத்தி வந்த ஒப்பந்தகாரர்களான சிவசங்கர ராஜா, நாராயணன் ஆகிய இருவரும் ’தங்களுக்கு சேர வேண்டிய பணிக்கான தொகை மற்றும் ஜி.எஸ்.டி கட்டணத்தையும் திரும்ப பெறுவதற்கான பணத்தையும்’ கேட்டுள்ளனர். உடனடியாக திருப்பி தரவேண்டும் என்றால் தனக்கு ரூ.1 லட்சத்தி 50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என பாஸ்கரன் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு தர வேண்டிய லஞ்ச பணத்தினை வீட்டிற்கு வந்து கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதனை சி.பி.ஐ. போலீசார் பதிவு செய்து கொண்டனர். இதனையடுத்து போனில் பேசியபடி நேற்று முன்தினம் இரவில் மதுரை மீனாம்பாள்புரம் பகுதியில் உள்ள குடியிருப்பில் பாஸ்கரின் வீட்டுக்கு ஒப்பந்தகாரர்களான சிவசங்கர் ராஜா மற்றும் சென்னையை சேர்ந்த நாராயணன் ஆகிய இருவரும் லஞ்சப்பணத்தை கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கொண்டுவந்த லஞ்ச பணத்தை கட்டுக் கட்டாக நிர்வாக பொறியாளர் பாஸ்கரன் வாங்கும்போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த சி.பி.ஐ. காவல்துறை அதிகாரிகள், நிர்வாக பொறியாளர் பாஸ்கரன் மற்றும் அவரிடம் லஞ்சம் கொடுத்த ஒப்பந்தகாரர் சிவசங்கர் ராஜா மற்றும் நாரயணன் ஆகிய மூவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மூன்று பேரையும் மதுரையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்திய நிலையில் மூவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி எம்.சிவபிரகாசம் உத்தரவிட்டார்.
மதுரையில் லஞ்சம் பெற முயன்ற மத்திய பொதுப்பணித்துறை மண்டல நிர்வாக பொறியாளர் மற்றும் லஞ்சம் கொடுக்க முயன்ற இருவரையும் சேர்த்து சி.பி.ஐ போலிசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுதல்களை பெற்றுவருகிறது. இது போன்று லஞ்சம், ஊழலில் திளைக்கும் அதிகாரிகள் மீது துறைரீதியாக கடுமையான நடவடிக்கைள் எடுக்கும் போது, பிற அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மதுரையில் இன்றைய கொரோனா அப்டேட் தகவல் -மதுரை : குறையும் தொற்று : தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள் ! இருப்புநிலை என்ன?