கரூர் அருகே 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண், கிணற்றில் சடலமாக கண்டுபிடிப்பு - சாவில் மர்மம் இருப்பதாக உடலை மீட்க வந்த தீயணைப்பு வாகனத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் சாலை மறியல்.


 




கோயிலுக்கு சென்ற இளம்பெண் மாயம்:


கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு  அவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் தனலட்சுமி, கடந்த வியாழக்கிழமை பணி முடித்து விட்டு வழக்கம் போல், வெங்கடாபுரம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு மாலை 4:30 மணியளவில் விளக்கு போட சென்றுள்ளார். அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை என்பதால், உறவினர்கள் வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 


 




உறவினர்கள் சாலை மறியல்:


இந்த நிலையில் காணாமல் போன தனலட்சுமி வெள்ளியணை அடுத்த ஒத்தையூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக கிடந்ததை ஊர் பொதுமக்கள் கண்டுபிடித்துள்ளனர். தனலட்சுமி சாமி கும்பிட சென்ற மாரியம்மன் கோவிலுக்கு முன்பு  செல்போன் ஆவணங்களுடன் இருசக்கர வாகனம் (XL) அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. தனலட்சுமி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உடலை மீட்க வந்த தீயணைப்பு வாகனத்தை, உறவினர்கள் மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கரூர் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


 




தனலட்சுமி காணாமல் போனதாக வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்த நாள் முதல் போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக, குற்றச்சாட்டு தெரிவித்து உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தனலட்சுமி இறப்பில் மர்மம் இருப்பதாக தெரிவிக்கும் உறவினர்கள் மாரியம்மன் கோவில் பூசாரி மணி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரைப் பிடித்து விசாரணை நடத்தும் வரை தனலட்சுமி உடலை கிணற்றிலிருந்து எடுக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial