திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த இருசப்பன் (55) இவரது மனைவி சாந்தி (47) இந்த தம்பதியினருக்கு தீபா என்ற ஒரு மகள் 11ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த 2006ம் ஆண்டு இருசப்பன் நோய் வாய்பட்டு இறந்துள்ளார். தனது மகள் தீபாவுடன் தனியாக வசித்து வரும் சாந்தி குடும்ப வருவாய்க்காக கட்டட வேலை செய்து வந்துள்ளார்.


வழக்கம்போல் சாந்தி நேற்று கட்டட வேலைக்கு சென்று இரவு வீட்டுக்கு வந்த நிலையில் இரவு சுமார் 8.30 மணிக்கு சாந்திக்கு அவரது தொலைபேசிக்கு அழைப்பு வந்ததாகவும் அதன்பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது.  நீண்ட நேரம் ஆகியும் சாந்தி வீடு திரும்பாத காரணத்தால் அவரது மகள் தீபா தொடர்ந்து தாய் சாந்தியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சாந்தி தொலைபேசியை எடுக்காததால் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தாரின் உதவியுடன் இரவு முழுவதும் தாய் சாந்தியை மகள் தீபா தேடினார்.




இந்நிலையில் இன்று காலையில் புதுப்பாளையம் கிராமத்தில் அருகே உள்ள பலராமன் என்பவரது விவசாய நிலத்தில் கை, கால் மற்றும் காது, கழுத்து கொடூரமான முறையில் அறுக்கபட்ட நிலையில் சாந்தி சடலமாக கிடந்ததுள்ளார். 


தகவல் அறிந்து வந்த ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் மற்றும் கண்ணமங்கலம் காவல்துறையினர் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கைரேகை டி.எஸ்.பி சுந்தராஜன் சம்பவ இடத்தில் கைரேகை தடயங்களை சேகரித்தார். மேலும் குற்றவாளியை பிடிப்பதற்கு  மோப்ப நாய் ’மீயான்’ வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது.



இக்கொலை சம்பவம் குறித்து கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் குறித்து டி.எஸ்.பி கோடீஸ்வரன் தெரிவிக்கையில்,


புதுப்பாளையம் கிராமத்தில் சடலமாக இருந்த சாந்தியின் உடலில் கழுத்து, கால், கை, காது, மூக்கு ஆகியவை அறுக்கப்பட்ட நிலையில், அவர் அணிந்து இருந்த தங்க கம்மல், மூக்குத்தி அறுத்து எடுக்கப்பட்டுள்ளது. சாந்தி அணிந்திருந்த நகையை கொள்ளை அடிப்பதற்காக கொலை நடந்திருக்கலாம் எனவும் கொலை நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சாந்தியின் தொலைபேசியில் உள்ள எண்களை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறினார். புதுப்பாளையம் கிராமத்தில் பெண் கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.