கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீ நெடுஞ்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் தேவராஜ் (22), இவர் தொலைதூர கல்வி மூலம் கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் தேவாராதனை தேடி அலைந்தனர். அப்போது அவர் தனது காதலியை பார்ப்பதற்காக அருகிலுள்ள சாவடி குப்பம் கிராமத்திற்கு சென்று இருப்பதாக நண்பர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தேவராஜன் உறவினர்கள் சாவடிகுப்பம் கிராமத்திற்கு சென்றனர். சாவடிகுப்பம் விநாயகபுரம் சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு அருகில் தேவராஜன் மோட்டார் சைக்கிள் பூட்டிய நிலையில் கேட்பாரற்று கிடந்தது அங்கு உள்ள கிணற்றின் அருகில் உள்ள மரத்தடியில் அவரது வேட்டி, செல்போன், மூக்கு கண்ணாடி, செருப்பு மற்றும் மோட்டார் சைக்கிளின் சாவி கடந்தது, ஆனால் தேவராஜன் காணவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜனின் அண்ணன் தீயரசன் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் அளித்த புகாரில் காதலியை பார்க்க சென்ற தனது தம்பி மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறு கூறி இருந்தார்.
இந்நிலையில் தேவராஜனை கொலை செய்து அருகில் உள்ள கிணற்றில் வீசியிருக்கலாம் என்று வதந்தி பரவியது, இதனையடுத்து ஸ்ரீ நெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாவடிகுப்பம் கிராமத்தில் தேவராஜனின் உடமைகளை கண்டெடுக்கப்பட்ட கிணற்றின் அருகே திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து 30 அடி ஆழமுள்ள கிணற்றில் கிடந்த தண்ணீரை இரண்டு மோட்டார் மூலம் வெளியேற்றினார்கள் கிணற்றில் அவரை காணவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக தேவராஜனின் காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தேவராஜன் தன்னை சந்திக்க வருவதாக செல்போனில் கூறினார் அதன்படி நான் அவருக்காக ஓரிடத்தில் காத்து இருந்தேன் ஆனால் வெகு நேரமாகியும் அவர் வராததால் நான் வீட்டுக்கு சென்று விட்டேன் என்று தேவராஜனின் காதலி கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் தேவராஜனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இன்று தேவராஜ் உடமைகள் இருந்த அதே பகுதியில் சூசைராஜ் என்பவரது நிலத்திற்கு அருகே சாலையோரம் உள்ள மற்றொரு கிணற்றில் இளைஞரின் உடல் மிதந்து கிடந்த்துள்ளது. தெரு நாய்கள் கிணற்றை சுற்றி வர , சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த முதியவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து கிணற்றில் மிதந்த தேவராஜ் உடல் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உயிரிழந்த தேவராஜன் உறவினர்கள், அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் காதலி மற்றும் உறவினர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சடலத்தை எடுத்து செல்ல மறுத்தனர், டிஎஸ்பி அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றது ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையம் முன்பு திரண்டனர். தொடர்ந்து காதலி மற்றும் அவரது உறவினர்களை ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இளைஞரின் உடல் பிரதே பரிசோணைக்காக கொண்டு செல்லபட்ட நிலையில் அதன் அடிப்படையிலும், காதலி மற்றும் அவரின் தாய் உறவினர்கள் என 5 நபர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருவதால் விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியும் என காவல்துறையினர் தரப்பில் கூறபடுகிறது. காதலியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.