தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் பெண்ணிடம் இருந்து தங்க செயினை பறித்துச் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து நகையை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்.பி., வெகுவாக பாராட்டினார்.
அக்டோபர் மாதம் நடந்த வழிப்பறி
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு பர்வீன் தியேட்டர் அருகில் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் குளோரி (54) என்பவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் குளோரி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் செயினை அறுத்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டார்.
தனிப்படை போலீசார் அமைப்பு
இதுகுறித்து குளோரி தமிழ் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட நபரை கண்டறிய இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சாமிநாதன், போலீசார் புவனேஷ், பிலிராஜ், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை
தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வந்தனர். சிசிடிவி காய்ச்சலின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் சென்னை நங்கநல்லூர் பகுதி சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் அருண்குமார் (36 ) என்பது கண்டறியப்பட்டது.
வழிப்பறி செய்த இளைஞர் கைது
இதை அடுத்து தனிப்படை போலீசார் அருண்குமாரை கைது செய்து அவரிடமிருந்து 5 சவரன் தங்க செயினை கைப்பற்றினர். மேலும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழிப்பறி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளியை கைது செய்து நகையை மீட்ட தனிப்படை போலீசாரை தஞ்சாவூர் எஸ்பி ஆசிஷ் ராவத் பாராட்டினார்.
இதுபோன்ற சம்பவங்களில் உடனுக்குடன் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைக்கும் தஞ்சை மாவட்ட காவல்துறையினருக்கு பொதுமக்களும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.